மது எவ்வளவு கேடானதோ அதே அளவுக்கு லாட்டரியும் கேடானதுதானே?.. லாட்டரி ஒழிப்பு மாநாடு நடத்துவாரா ஆதவ்.. எக்ஸ் எம்பி பேச்சு!
திமுக கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் ஆதவ் அர்ஜூனா விசிகவுக்கு சீட்டுகளை குறைத்து கொடுக்க பேரம் பேசிவிட்டு, இப்போது விசிகவுக்கு போன பிறகு மாற்றிப் பேசுவது ஏன் என்று தர்மபுரி முன்னாள் மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அளித்த பேட்டி கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கியிருந்தது. அவர் 'ஆட்சி அதிகாரத்தில் விசிக பங்குபெற வேண்டும். அதற்காகக் கூட்டணிக்கட்சிகளுக்கு ஒரு குறைந்த பட்ச செயல்திட்டம் உருவாக்கப்பட்ட வேண்டும். 40 ஆண்டுகளாகக் களத்தில் இருக்கின்ற திருமாவளவன் ஏன் துணை முதல்வராக ஆகக்கூடாது. எங்களின் இலக்கு அதுதான்' என்று பேசியிருந்தார்.

அதைத்தாண்டி, '4 ஆண்டுகள் முன்பாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தவர் துணை முதல்வராகும் போது திருமாவளவன் ஆகக்கூடாதா?' என நேரடியாக அவர் உதயநிதியை தாக்கியதால் சலசலப்பு எழுந்தது. அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் விமான நிலையத்தில் பேட்டி அளித்த திருமாவளவன், 'திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். அதில் எந்த சலசலப்பு இல்லை' என்று கூறியிருந்தார். ஆதவ் அர்ஜுன் மீது நடவடிக்கை தொடர்பாகக் கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்றார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இது குறித்து தர்மபுரி திமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறிப்பாக அவர் திருமா மீது தனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு என்று விளக்கம் அளித்துள்ள அவர், குறிப்பாகத் தான் முன்வைக்கும் கேள்விகள் ஆதவ் அர்ஜூனாவை நோக்கித்தான் என்றும் கூறியுள்ளார். ஆதவ் அர்ஜூனாவை பற்றியும் அவர் பேசிய விவகாரங்கள் பற்றியும் பேட்டி அளித்துள்ள செந்தில்குமார், "பாஜக எப்போது தங்கள் அணிக்கு திருமா வருவார் என காத்திருக்கிறது. அவர் நினைத்தால் மத்திய அமைச்சராக முடியும். அதற்கான வாய்ப்பும் உள்ளது. பாஜக அப்படித்தான் ராம்விலாஸ் பஸ்வானை வளர்த்துவிட்டது. அந்த இடத்தில் விசிகவை சேர்க்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஒரு கொள்கை அடிப்படையில் பாஜக பக்கம் போக முடியாது என்பதில் திருமா உறுதியாக உள்ளார். இன்னும் சொல்லப் போனால் துணை முதல்வர் என்பது மத்திய அமைச்சரைவிடப் பெரிய பதவி இல்லை. தமிழக அமைச்சர் பதவி அளவுக்குக்கூட அது பெரிய பதவியல்ல.

தனக்கு வரக்கூடிய மத்திய அமைச்சர் பதவியையே ஒதுக்கி வைத்துவிட்டு, அவர் திமுக கூட்டணியில் தொடர்கிறார். அவர் போய் துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதைப் போல ஆதவ் அர்ஜூனா ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கிறார். இது தொண்டர்களின் விருப்பம் என்கிறார். விசிகவில் இவரை விடப் பல ஆண்டுகளாக எம்.எல்.ஏ மற்றும் எம்பி ஆக உள்ள மூத்த தலைவர்கள் சொன்னால் அதில் ஒரு அர்த்தம் உள்ளது. இவர் கட்சிக்கு வந்த அடுத்த மாதமே துணைப் பொதுச்செயலாளர் பதவியைப் பெற்றுக் கொண்டு, உதயநிதியை 4 ஆண்டுகள் முன்னதாக சினிமாவிலிருந்தவர் என்கிறார்.

திமுக வளர்ச்சிக்கு உதயநிதி என்ன செய்திருக்கிறார் என்பது எங்கள் கட்சிக்குத்தான் தெரியும். ஆதவ் அர்ஜூனாவுக்கு என்ன தெரியும்? எனவே பொதுவெளியில் உதய்யை பற்றிப் பேசியது கூட்டணி தர்மமே இல்லை. மகளிர் உரிமைத் தொகை கொடுத்ததால்தான் டாஸ்மாக் வருமானம் அதிகமாகியுள்ளதாக ஆதவ் சொல்கிறார். கேட்டால் டேட்டா இருக்கிறது என்கிறார். தமிழக அரசின் திட்டக்குழு இதனால் எத்தனை குடும்பங்கள் பொருளாதார அளவில் முன்னேறி உள்ளன என்பதைப் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளதே? அது தரவு இல்லையா?

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவில் ஆதவ் அர்ஜூனா இருந்தவர். அப்போது விசிகவுக்கு சீட்டுகளைக் குறைத்துத் தரவேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தியவர். இப்போது 2 ஆண்டுகள் கழித்து விசிக வளர்ந்து இருக்கிறது சீட்டு கூடுதலாகத் தரவேண்டும் என்கிறார். இந்தத் தேர்தல் சார்ந்து கருத்துக் கணிப்புகள் எல்லாம் அப்படியே உண்மை இல்லை. எங்களுக்கு 30 லட்சம் வாக்குகள் இருக்கிறது. திமுகவுக்கு இவ்வளவு வாக்குகள் இருக்கின்றன. அதைக் கூட்டினால் இந்த அணிதான் வெற்றி என்று உட்கார்ந்த இடத்திலேயே இவர்கள் ஒரு டேட்டாவை தருகிறார்கள். அப்படி என்றால் தேர்தல் எதற்கு? இவ்வளவு வாக்குகளை வைத்துள்ள கூட்டணிதான் வெற்றி பெறும் என முன்கூட்டியே அறிவித்துவிடலாமே? இந்தக் கணிப்புகள் எல்லாம் ஒரு ஊகம்தான்.

ஒரு காலத்தில் விசிகவுக்கு 1 எம்பிதான் இருந்தது. அன்று திமுகவுக்கு 24 இருந்தது. இப்போது விசிகவுக்கு 2 எம்பி இருக்கிறார்கள். இப்போது திமுகவுக்கு 22 தான் உள்ளது. பெருந்தன்மையாகக் குறைத்துக் கொண்டுதான் கூட்டணிக்குக் கொடுத்துள்ளோம். அது பெருந்தன்மை இல்லையா? விசிக வளரட்டும் என விட்டுத்தரவில்லையா? ஆகவே தனக்கு எம்பி சீட் திமுக தரவில்லை என்பதால் வன்மத்தில் பேசுகிறார் ஆதவ் அர்ஜுன். அடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் லாட்டரி தொழிலைக் கொண்டுவரலாம் என லாபி செய்து பார்த்தார். அதன் மூலம் அரசுக்கு இவ்வளவு வருமானம் வரும் என முட்டி மோதி திரும்பக் கொண்டு வர நினைத்தார். அது நடக்கவில்லை. அந்தக் கோபம் அவருக்குள் உள்ளது.

நான் ஆதவ் அர்ஜூனாவை கேட்கிறேன். மது எவ்வளவு கேடானதோ அதே அளவுக்கு லாட்டரியும் கேடானதுதானே? இதனால் எவ்வளவு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது? இந்த மது ஒழிப்பு மாநாடு முடிந்த உடனே திருமாவின் தலைமையில் இந்தியா முழுமைக்கும் லாட்டரி ஒழிப்பு மாநாடு நடத்த ஆதவ் அர்ஜூனா முயற்சி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

உடனே லாட்டரியில் சம்பாதித்த பணத்திலிருந்து நன்கொடை வாங்கவில்லையா? எனக் கேட்கக்கூடாது. இவர்கள் நன்கொடை கொடுங்கள் என்று யாரையும் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி திமுக நன்கொடை பெறவில்லை? இவர்கள் நன்கொடை அளித்ததால் தான் கட்சி நடந்து வருகிறது என்று சொல்ல முடியாது. திமுக 1949இல் இருந்து இயங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும் நன்கொடை தரலாம். ஆனால், என் வாதம் மதுவைப் போல லாட்டரியும் கேடானதுதான். அதை ஒழிக்க திமுக தயாராக உள்ளது. வாருங்கள் இணைந்து அதற்கு மாநாடு நடத்துவோம். இந்தியா முழுக்க லாட்டரியை ஒழிப்போம்" என்கிறார்.