கரூரில் தனிப்படை போலீசில் சிக்கிய கல்யாண ராணி சத்யாவின் 'புரோக்கர்' தோழி அதிரடி கைது.. உள்ளே.. வெளியே..!!
பல ஆண்களை திருமணம் செய்து பண மோசடி செய்த கல்யாண ராணி சத்யாவின் தோழியும் அவருக்கு புரோக்கராக செயல்பட்டவருமான தமிழ்செல்வியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த தமிழ்செல்வியை செல்போன் சிக்னலை வைத்து கரூரில் போலீஸார் இப்போது கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). (29 வயதான) இவர் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவன விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். ராஜாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண் தேடி வந்தனர். அப்போது ஆன்லைன் மேட்ரிமோனியல் ஆப் மூலமாக ஈரோடு மாவட்டம், கொடுமுடியைச் சேர்ந்த சத்யா (30 வயது) என்பவர் ராஜாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளார்.

ராஜாவுடன் சத்யா வாட்ஸ்அப் மூலம் பேசியுள்ளார். அப்போது ராஜாவிடம் தனது திருமணத்திற்கு வரன் தேடுவதாகவும், தமிழ்ச்செல்வி என்ற இடைத்தரகர் வரன் தேடிக் கொண்டிருப்பதாக சத்யா கூறியிருக்கிறார். கையோடு தமிழ்ச்செல்வியையும் ராஜாவுக்கு சத்யா அறிமுகம் செய்து வைத்துள்ளார். சத்யாவும் ராஜாவும் செல்போனில் பேசி வந்த நிலையில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போயிருக்கிறது.

இதையடுத்து, சத்யாவும் ராஜாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது சத்யாவுக்கு மாப்பிள்ளை வீட்டார் 12 பவுன் நகைகளை அணிவித்து இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு சத்யாவின் நடவடிக்கையில், கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, செல்போனை எடுத்து பார்த்த போது, சத்யா பல ஆண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இருந்து இருக்கின்றன. இது பற்றி சத்யாவின் கணவர் ராஜா, கேட்ட போதும் வீட்டில் இருந்து சத்யா எஸ்கேப் ஆனார்.

இதையடுத்து தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜா புகார் செய்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. சத்யா சுமார் 55 ஆண்களை ஏமாற்றி கல்யாணம் செய்து பணம் பறித்தது தெரியவந்தது. சத்யாவின் ஏமாற்று வேலையில் மாடு மேய்ப்பவர் முதல் எஸ்.ஐ வரை சிக்கி தங்களது பணத்தையும் நகைகளையும் பறி கொடுத்து இருக்கிறார்கள்.

இதையடுத்து, சத்யாவை தேடி வந்த போலீசார், புதுவையில் தனது தோழி வீட்டில் பதுங்கி இருந்த கல்யாண ராணி சத்யாவை கைது செய்தனர். இந்த நிலையில் திருப்பூர் சிறையில் உள்ள சத்யா, தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில் 60 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் நிலையில் இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, சத்யாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில்தான், சத்யாவுக்கு புரோக்கராகவும் தோழியாகவும் இருந்த தமிழ்ச்செல்வி என்பவரை கரூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். செல்போன் சிக்னல் மூலம் தமிழ்ச்செல்வியை கைது செய்துள்ளனர். அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து உடுமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் திருப்பூர் அருகே உள்ள நல்லூர் சிறையில் அடைத்தனர். தமிழ்ச்செல்வியிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக்கூடும் என சொல்லப்படுகிறது.

மேலும் திருப்பூர் கல்யாண ராணி சத்யா வழக்கில் இன்று பரபரப்பு உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

கொடிமுடியைச் சேர்ந்த (30 வயது) பெண் சத்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஆனால், தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி, மேட்ரிமோனியலில், திருமணமாகாத பல இளைஞர்களை குறிவைத்து, அவர்களை திருமணம் செய்து ஏமாற்றி பணம், நகை மோசடி செய்து வந்துள்ளார்.

அந்தவகையில், தாராபுரத்தைச் சேர்ந்த (30 வயது) பேக்கரி ஓனர் மூலம் சத்யாவின் குட்டு அம்பலமானது. அரசு அதிகாரிகள், சர்வேயர், டிஎஸ்பி, சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயர், திருமணமாகாத இளைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், ஆடு மேய்ப்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள் என 55 பேரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாகவும், லட்சக்கணக்கில் இவர்களிடம் நகை, பணத்தை சத்யா பறித்ததாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதேபோல, மேட்ரிமோனியில் பெண் தேடி வரும் பல ஆண்களின் செல்போன் நம்பருக்கு பேசி அவர்களை தனிமையில் சந்தித்து, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாகவும் இருப்பாராம் சத்யா. இதை ரகசியமாக வீடியோ எடுத்து, பணம், நகை கேட்டு அவர்களை மிரட்டுவாராம். எனவே, சத்யாவின் செல்போனை போலீசார் ஆராய உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தன.

இந்நிலையில்தான், சத்யாவின் தோழி தமிழ்ச்செல்வி தற்போது போலீசில் கைதாகியுள்ளார். இவர் சத்யாவுக்கு புரோக்கராகவும் செயல்பட்டு வந்தவர்.. எனவே இவரை பிடித்து விசாரித்தால், பல உண்மைகள் தெரியவரும் என்பதால், மிக தீவிரமான வேட்டைக்கு பிறகு தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் தமிழ்ச்செல்வியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

தமிழ்ச்செல்வியிடம் விசாரணையும் நடத்தப்பட்டதில், பல்வேறு திடுக் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். "தமிழ்செல்வியின் கணவர் அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதால், வேறொருவருடன் தமிழ்ச்செல்வி வசித்து வருகிறார்.

கடந்த 2021-லிருந்தே சத்யாவுடன் தமிழ்ச்செல்விக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போதிருந்து பேஸ்புக் மற்றும் ஆன்லைன் வழியாக பெண் பார்ப்பவர்களை நோட்டமிட்டு பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர்.. பெண் பார்ப்பவர்களிடம் அணுகி, தன்னை புரோக்கர் என்று அறிமுகப்படுத்தி கொள்வாராம் தமிழ்ச்செல்வி.. உடனே சத்யாவின் படத்தை காட்டி, திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்வாராம்.

முக்கியமாக குறிப்பாக வசதி படைத்தவர்களை மட்டும் தேர்வு செய்து சத்யாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் தமிழ்ச்செல்வி.. இதற்காக புரோக்கர் கமிஷனையும் மாப்பிள்ளை வீட்டில் வாங்கி கொள்வாராம். சத்யாவுக்கு அம்மா, அப்பா, சில சொந்தக்காரர் என் அனைவரையும் வாடகைக்கு நியமித்துவிடுவார்கள்.

பார்ப்பதற்கு வசதி குறைவாக இருக்கும்படியான அம்மா, அப்பாக்களை தேர்ந்தெடுப்பார்கள். பிறகு மாப்பிள்ளை வீட்டாரிடம், சத்யா வீட்டில் வசதி குறைவு.. அதனால், நீங்களே நகை போட்டு இந்த கல்யாணத்தை செய்து கொள்ள வேண்டும் என்று தமிழ்ச்செல்வி பேசுவாராம். பல காலம் பெண் கிடைக்காமல் தவித்து கிடக்கும் மாப்பிள்ளை வீட்டினரும், இதற்கு சம்மதம் சொல்லி, சத்யாவுக்கு 10 முதல் 20 பவுன் நகை வரை கொடுத்து கல்யாணம் செய்து கொண்டு போவார்களாம்.

சரியாக 1 வாரம் மட்டும் மட்டும்தான், அந்த மாப்பிள்ளையுடன் குடும்பம் நடத்துவாராம் சத்யா. மாப்பிள்ளை ஏமாளி என்றால், 2 நாட்களே சத்யாவுக்கு போதுமாம். ஒரு வாரம் குடும்பம் நடத்தி விட்டு, நகை, பணத்துடன் அங்கிருந்து சத்யா, இன்னொரு ஊருக்கு சென்றுவிடுவாராம். இப்படி 20-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றியிருக்கிறாராம் சத்யா.

இதில் இன்னொரு அதிர்ச்சி என்னவென்றால், கல்யாணம் செய்து கொள்ளாமல் கணவன்- மனைவியாக வாழ்வதற்கும் தமிழ்செல்வி சத்யாவை பயன்படுத்தி வந்துள்ளார்.. இதுபோல 30-க்கும் மேற்பட்டோருடன் தனிமையில் உல்லாசமாக சத்யா இருந்துள்ளதாகவும், இதை வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்து எடுத்துக் கொண்டு அவர்களை மிரட்டி ரூ.10 முதல் 20 லட்சம் வரை பணம் பறித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதில் சில முக்கிய பிரமுகர்களும் அடக்கம் என்கிறார்கள்.

இதுவரை 53 பேரிடம் ஏமாற்றி பணம் பறித்து சொகுசு வாழ்க்கையை இந்த 2 பெண்களும் வாழ்ந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இப்போது சத்யாவின் பெயரில் கொடுமுடி அருகே ரூ.4 கோடி மதிப்பிலான இடம் வாங்கி உள்ளதாம்..

திருமணத்திற்காக ஒவ்வொரு மாப்பிள்ளை வீட்டிலும் போடும் நகைகள், தமிழ்ச்செல்வி பெயரில் பேங்க் லாக்கரில் இருக்கிறதாம். இவ்வளவும் தமிழ்ச்செல்வியிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து, போலீசார் தொடர்ந்து தமிழ்ச்செல்வியிடம் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்களாம். ஏற்கனவே, முக்கிய பிரபலங்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், அப்பாவி நபர்கள் என லிஸ்ட் நீள்வதாக தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல சத்யாவின் செல்போனை ஆய்வு செய்ய போவதாகவும் கூறப்பட்டது.

அந்தவகையில், போலீசார் இந்த மோசடி விவாகரத்தில் முனைப்பு காட்டி, விசாரணையை தீவிரப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். எப்படியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்று தந்து, அவர்களின் பணம், நகைகளை மீண்டும் ஒப்படைப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.