சாலை அமைக்கும் நிறுவனத்திடம் செய்யூர் விசிக எம்எல்ஏ லஞ்சம்.. உயர் நீதிமன்றம் வழக்குப் பதிய உத்தரவு!
சாலை அமைக்கும் நிறுவனத்திடம் செய்யூர் சட்டப்பேரவை உறுப்பினர் லஞ்சம் கேட்ட வழக்கில், காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செய்யூர் சட்டப்பேரவை உறுப்பினர் பாபு, புத்திரன்கோட்டை பஞ்சாயத்து தலைவர், மாம்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் இந்த விவகாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த டி.எஸ்.ஆர் சன்ஸ் இண்டியா இன்ஜினியர்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம் தரப்பில் அதன் நிர்வாக இயக்குனர் ரவிக்குமார் தாக்கல் செய்துள்ள வழக்கில், நபார்டு திட்டத்தின் கீழ் ஊரக பகுதியான எம்.வி ரோடு முதல் அகரம் பகுதி வரை சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை டெண்டர் கோரியது.

இதில் புத்திரன்கோட்டை முதல் மாம்பாக்கம் அகரம் ரோடு வரை இரு சாலைகள் அமைப்பதற்கான பணிகள் கடந்த 2023 ம் ஆண்டில் தங்கள் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன.

இந்த சாலை அமைக்கும் பணிகளின் போது அதை செய்ய விடாமல், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த செய்யூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பாபு, புத்திரன் கோட்டை பஞ்சாயத்து தலைவர் நிர்மல்குமார், மற்றும் மாம்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் ராமைய்யா ஆகியோர் தடுத்து, லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதனால் 6 மாதத்தில் முடிக்க வேண்டிய பணிகள் ஒரு வருடமாகியும் 50% பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க தனக்கும், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கும், உபகரணங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு இன்று வந்தது, அப்போது காவல்துறையினர் தரப்பில் அரசு குற்றவியல் வழக்கறிஞர் முகிலன் ஆஜராகி, சம்பந்தப்பட்ட நிறுவனம் அளித்த புகார் மீது விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

பின்னர் உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இது தொடர்பாக செய்யூர் சட்டப்பேரவை உறுப்பினர் (எம்எல்ஏ) பாபு, புத்திரன்கோட்டை பஞ்சாயத்து தலைவர், மாம்பாக்கம் பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இந்த வழக்கில் காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.