சென்னை 7 கிணறு பகுதியைச் சேர்ந்த காக்கா தோப்பு பாலாஜி. அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்தார். யுவராஜ் என்ற ரவுடி மூலம் ரவுடி உலகில் காலடித்து வைத்தவர், பின்பு யார் பெரியவர் என்ற பிரச்சினையில் அவரையே போட்டு தள்ளி பெரிய ரவுடியாக மாறினார்.
தற்போது சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரனுக்காக பல கொலைகளை செய்த காக்கா காப்பு பாலாஜி, வடசென்னை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக பிற ரவுடிகளை கொலை செய்தார்.
காக்கா தோப்பு பாலாஜி மீது கொலை கொள்ளை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் பல கொலை வழக்குகளில் சிக்கித் தலைமறைவாக இருந்த காக்கா தோப்பு பாலாஜியை இன்று போலீசார் சுற்றி வளைத்தனர். வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே ஒரு குடியிருப்பில் காக்கா தோப்பு பாலாஜி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து கொடுங்கையூர் போலீசார் அதிகாலையில் காக்கா தோப்பு பாலாஜியை சுற்றி வளைத்தனர்.
அப்போது போலீசாரை தாக்கி விட்டு செல்ல முயன்ற காக்கா தோப்பு பாலாஜி போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் இன்ஸ்பெக்டர் சரவணன் துப்பாக்கியால் சுட இடது மார்பில் குண்டு பாய்ந்து காக்கா தோப்பு பாலாஜி சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். இந்த என்கவுண்டர் சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தற்போது காக்கா தோப்பு பாலாஜி வரை சுமார் 15 என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.
2019 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கதிர்வேல், வியாசர்பாடி சேர்ந்த வல்லரசு ஆகியோர் போலீசார் நடத்திய என்கவுண்டில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2020 ஆம் ஆண்டு ஒரே ஒரு என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றது. சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான சங்கரை போலீசார் சுட்டுக் கொண்டனர். போலீசார் திட்டமிட்டு சங்கரைக் கொன்றதாக அவரது உறவினர்கள் புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கடலூரை சேர்ந்த கிருஷ்ணன், காஞ்சிபுரத்தைச் சேர்ர்ந்த முர்தசா ஆகியோர் 2021 ஆம் ஆண்டு போலீசாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.
2022 இல் செங்கல்பட்டைச் சேர்ந்த சேர்ந்த தினேஷ், மொய்தீன் மற்றும் நெல்லையில் நீராவி முருகன் ஆகியோர் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்டனர்.
2023 மட்டும் 3 என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றது, சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சோட்டா வினோத், ரமேஷ், திருச்சியைச் சேர்ந்த பில்லா ஜெகன் ஆகியோர் காவல் துறையின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகினர்.
2024 ஆம் ஆண்டில் திருச்சி திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடியான துரைசாமி புதுக்கோட்டையில் என்கவுண்டர் செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடமும், தற்போது காக்கா தோப்பு பாலாஜியும் என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கின்றனர்.