திருப்பூர் மாவட்டம், பலவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரின் தாய்க்கு வீரபாண்டி பகுதியில் தமிழக அரசு சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது. அந்த இடத்தில் அசோக்குமாரின் தாய் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். இந்த நிலையில், அந்த இடத்தை மகன் அசோக்குமார் பெயருக்கு தான கிரையும் செய்துவைக்க முடிவு செய்து, இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கு தடையின்மைச் சான்று சான்றுக்காக ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார். இது குறித்து திருப்பூர் தெற்கு வருவாய் ஆய்வாளரை அணுகினார்.
இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கு தடையின்மைச் சான்றிதழுக்கு பரிந்துரை செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வேண்டுமென வருவாய் ஆய்வாளர் நாகராஜன் கேட்டுள்ளார். பணம் தர விட்டால் தடையின்னமைச் சான்றிதழுக்கு பரிந்துரை செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று அசோக்குமார் தெரிவித்ததையடுத்து, ரூ.8 ஆயிரம் தந்தால்தான் தடையின்மைச் சான்று கிடைக்கும் என வருவாய் ஆய்வாளரின் உதவியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அசோக் குமார். இது தொடர்பாக திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் அசோக்குமார் புகார் அளித்தார். அவரிடம் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், அசோக்குமாரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். அசோக்குமார் அந்த ரூபாய் நோட்டுகளை திருப்பூர் தெற்கு வருவாய் ஆய்வாளர் நாகராஜனிடம் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
வருவாய் ஆய்வாளர் நாகராஜனிடம் விசாரணை மேற்கொண்டதில் தடையின்மைச் சான்றிதழுக்கு பரிந்துரை செய்ய லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நாகராஜையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் சுரேஷ்குமாரையும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி கைதுசெய்து வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.