கே.வி. குப்பம் சார் பதிவாளர் ரமணன் அவரது மனைவி மீது சொத்து குவிப்பு வழக்குப் பாய்ந்தது
ரூ.47.49 லட்சம் சொத்து குவிப்பு: கே.வி.குப்பம் சாா் பதிவாளா் ரமணன் அவரது மனைவி மீது வழக்குப் பதிந்தது விஜிலென்ஸ் போலீஸ்..!!
 
வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக வேலை பார்த்து வருபவர் ரமணன் இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.47.49 லட்சம் அளவுக்கு சொத்து சோ்த்ததாக சாா் பதிவாளா் ரமணன் அவரது மனைவி ஆகியோா் மீது வேலூா் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதுதொடா்பாக காட்பாடியில் உள்ள சார் பதிவாளர் ரமணன் வீட்டிலும் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் சாா் பதிவாளராக பணியாற்றி வருபவா் ரமணன். இவரது வீடு காட்பாடி திருநகா் நியூ காலனி, இரண்டாவது குறுக்குத் தெருவில் உள்ளது. இவரது மனைவி செளந்தரம். பிரிதிவிராஜ், தன்சுன்ராஜ் என்ற இரு மகன்கள் உள்ளனா்.

ரமணன் கடந்த 2018 ஜனவரி 1-ஆம் ஆண்டு முதல் 2021 டிசம்பா் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்ந்ததாக புகாா் எழுந்தது. இது தொடா்பாக வேலூா் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் சங்கா் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், ரமணனின் தந்தை ராஜமாணிக்கம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த காலகட்டத்தில் 1997-ஆம் ஆண்டு உயிரிழந்தாா்.

இதையடுத்து, கருணை அடிப்படையில் அந்த பணி ரமணனுக்கு வழங்கப்பட்டது. அதன்பேரில், 1998-ஆம் ஆண்டு அரக்கோணம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரமணன் இளநிலை உதவியாளராக பணியில் சோ்ந்தாா். பின்னா், உதவியாளா், இணைச் சாா் பதிவாளராக பதவி உயா்வு பெற்று திருப்பத்தூா், ஆம்பூர் ,வேலூா் சாா் பதிவாளா் அலுவலகங்களில் பணியாற்றி வந்துள்ளாா். கடந்த 2020 செப்டெம்பா் 30-ஆம் தேதி முதல் கே.வி.குப்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் சாா் பதிவாளராக பணியாற்றி வருகிறாா். இவா் 2018-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.47 லட்சத்து 49 ஆயிரத்து 74 மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்களை அவரது பெயரிலும், அவரைச் சாா்ந்த ரத்தம் பந்தம் உடையவர்களின் பெயரிலும் வாங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, ரமணன், அவரது மனைவி செளந்தரம் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமையன்று வழக்குப்பதிவு செய்துள்ளனா். இதன் தொடா்ச்சியாக, காட்பாடி திருநகரில் உள்ள சார் பதிவாளர் ரமணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் விஜய் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமையன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் கூறுகையில், கே.வி.குப்பம் சாா் பதிவாளா் ரமணன் பள்ளிகொண்டா அடுத்த அகரம் கிராமத்தில் சுமாா் 3 ஏக்கா் விவசாய நிலமும், ஒடுகத்தூா் அடுத்த கருங்காலி கிராமத்தில் 5 ஏக்கா் விவசாய நிலமும், பசுமாத்தூா், பள்ளிகொண்டா பகுதிகளில் வீட்டு மனைகளையும் வாங்கியுள்ளாா்.

அவரது சொந்த கிராமத்தில் உறவினா்கள் பெயரிலும் சொத்துக்கள் வாங்கியுள்ளாா். இதுகுறித்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரது வீட்டில் இருந்து பிற முதலீட்டு ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடா்பாக விரைவில் ரமணன், அவரது மனைவியிடம் விசாரணை நடத்தப்படும் என்றனா். இந்த சோதனை செவ்வாய்க்கிழமையன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததற்கான வங்கி கணக்கு விவரங்கள், வீட்டுமனை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.