பட்டா மாறுதலுக்கு ரூ. 7000 கையூட்டு - விஏஓ-வை கைது செய்த விஜிலென்ஸ் போலீஸ்.!!
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா வேம்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோலையன் மகன் கருப்பன் (வயது 48). இவர் கூலி தொழிலாளி. இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு வேம்பனூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் 20 சென்ட் புஞ்சை நிலத்தை 10 ஆயிரத்திற்கு வாங்கி அதில் வீடு கட்டி வசித்து வருகிறார். அந்த இடத்திற்கு பட்டா பெயர் மாற்றம் பெறுவதற்காக கடந்த 26.9.2023 ஆம் தேதியன்று அரசு இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பம் செய்துள்ளார். அதற்குப் பிறகு 20. 12.2023 ஆம் தேதியன்று இவரது விண்ணப்பம் இணையதளத்தில் பார்த்தபோது நிராகரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் கருப்பன் தனிப்பட்டா வேண்டி மீண்டும் 19.1.202419 ஆம் தேதியன்று இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ளார்.

அவரது மனுவின் நிலை குறித்து 22.1.2024 ஆம் தேதியன்று பார்த்தபோது சம்பந்தப்பட்ட வேம்பனூர் கிராம நிர்வாக அலுவலரிடம் தனது மனு நிலுவையில் இருப்பது தெரியவந்ததால் கருப்பன் வேம்பனூர் கிராம நிர்வாக அலுவலகம் சென்று அங்கிருந்த விஏஓ சோலை ராஜ் என்பவரை சந்தித்து தனது பட்டா மாறுதல் குறித்து கேட்டுள்ளார். அதற்கு விஏஓ சோலை ராஜ் உங்களுக்கு பட்டா மாறுதல் கிடைப்பதற்கு நான் தயார் செய்து அனுப்பி வைத்தால் தான் தனிப்பட்டா உங்களுக்கு கிடைக்கும் அதற்காக ரூ. 10 ஆயிரம் தனக்கு தனியாக கொடுத்து விட வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு கருப்பன் 1997 இல் நான் வாங்கிய இடத்துக்கே 10 ஆயிரம் ரூபாய் தான் கொடுத்தேன். பட்டா மாத்துவதற்கு 10 ஆயிரம் ரூபாய் கேட்கிறீர்களே, நான் கூலித் தொழிலாளி, உங்க தொகையை குறைச்சு சொல்லுங்க சார் என்று கேட்டுள்ளார்.

அதற்கு விஏஓ சோலை ராஜ் 3 ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டு 7 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் பண்ணித் தர முடியும் இல்லன்னா போன முறை மாதிரியே இப்பவும் உங்க விண்ணப்பம் ரிஜெக்ட் ஆகிடும் என்று சொல்லியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பன் திருச்சி மாவட்ட லஞ்ச  ஒழிப்புத்துறை அலுவலகம் சென்று அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீஸ் ஆய்வாளர்கள் பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் குழுவினர், லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய பணத்தை கருப்பணியிடம் கொடுத்து அனுப்பி வைத்தார். கருப்பனிடமிருந்து விஏஓ சோலை ராஜ் 23.1.2024 அன்று காலை 11:30 மணியளவில் லஞ்சப் பணத்தை பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். விஏஓவை கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். அத்துடன் விஏஓ சோலைராஜ் பணம் பெறுவதற்கு உடந்தையாக இருந்த பாஸ்கர் என்பவரையும் பிடித்து இருவரையும் கைதுசெய்து வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.