ஓட்டுனர்களிடமிருந்து முறைகேடாக லஞ்சம் பெற்ற மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட்.!!
லாரி, பஸ் ஓட்டுநர்களிடமிருந்து முறைகேடாக லஞ்சம் வாங்கிய. (ஆர்டிஓ) மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் வசந்தி சஸ்பெண்ட்.!!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகாவிற்குவுட்பட்ட கிறிஸ்டியான்பேட்டை தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது இந்த பகுதி. இங்குள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில், மோட்டார் வாகன ஆய்வாளராக வசந்தி என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022 மார்ச் 17-ம் தேதியிலிருந்து இவர் பணியாற்றி வருகிறார்.

இவர் ஆந்திராவில் இருந்துவரும் வாகன உரிமையாளர்களிடம் லஞ்சம் பெறுவதாக, வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீஸாருக்கு கடந்த 10ம்தேதியன்று ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ஆய்வாளர் விஜய் தலைமையிலான போலீஸார் கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் அன்றைய தினமே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பிறகு, டியூட்டி முடிந்து வசந்தி வீட்டுக்கு காரில் கிளம்பவும், போலீசாரும், வசந்தியை பின் தொடர்ந்து சென்றனர். சுமார் 25 கி.மீட்டர் தூரம் சென்றபோது, அதாவது ராணிப்பேட்டை பாரதி நகர் அருகே வசந்தியின் காரை போலீசார் சுற்றிவளைத்து மடக்கி, காரிலும் சோதனையிட்டனர். அப்போது, ரூ.3 லட்சம் ஒரு வெள்ளை கவரில் சுற்றப்பட்டிருந்தது.. இதனை போலீசார் கைப்பற்றினர்.

தொடர்ந்து ராணிப்பேட்டையில் பாரதி நகரில் உள்ள வசந்தியின் வீட்டிற்குள் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது வீட்டிற்குள் மேலும் ரூ.3.25 லட்சம் கைப்பற்றப்பட்டது. மொத்தம் ரூ.6.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பணம் எந்த வகையில் வந்தது? என்று தெரியவில்லை.

மேலும், வசந்தியின் வீட்டில் சோதனை செய்தபோது காப்பீடு சம்பந்தப்பட்ட ஏராளமான ஆவணங்களும், அவரது 4 வங்கிக்கணக்குகள் குறித்த ஆவணங்களையும் பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்திருந்தனர்.

அதுமட்டுமல்ல, ஆய்வாளர் வசந்தியின் குடும்பத்தினரின் வங்கிக்கணக்குகள் குறித்த தகவல்களை சேகரித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவை அனைத்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் அதில் வருமானத்திற்கு அதிகமாக பணம் இருப்பது தெரிய வந்தால் துறை ரீதியான அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

பின்னர் இதுதொடர்பான அறிக்கை மற்றும் எப்ஐஆர் நகல் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து ஆணையர் ஏ.சண்முகசுந்தரம், இ.ஆ.ப., துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிட்டார். அந்த விசாரணையில்தான், மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தியிடம் கைப்பற்ற பணம் அத்தனையும், முறைகேடாக பெற்றது என்பது உறுதியானது. இதையடுத்து வசந்தியை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து ஆணையர் ஏ.சண்முகசுந்தரம், இ.ஆ.ப‌., உத்தரவிட்டிருக்கிறார்.