எம்.எல்.ஏ மகன், மருமகள் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
தலைமறைவாக உள்ள பல்லாவரம் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினாவை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மருமகள் மெர்லினா ஆகியோர் சென்னை திருவான்மியூரில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த சிறுமி ரேகா என்பவர் பணிப்பெண்ணாக சேர்க்கப்பட்டார். 12-ம் வகுப்பு படித்து முடித்த சிறுமி ரேகாவுக்கு மருத்துவம் படிக்க ஆசை. இதனைக் கருத்தில் கொண்டு ரேகாவை மருத்துவம் படிக்க உதவுவதாக ஆண்டோ மதிவாணனும் மனைவி மெர்லினாவும் உதரவாதம் அளிக்கப்பட்டதன் பேரில் ரேகா பணிப்பெண்ணாக சேர்க்கப்பட்டார். ஆனால், நடந்ததென்னவோ வேறு.

தினமும் 16 மணி நேரம் வேலை வாங்குவதாகவும், ஆண்டோ மதிவாணன் சிகரேட்டால் சூடு வைத்ததாகவும், கோபம் வரும்போதெல்லாம் இருவரும் தன்னை கடுமையாக தாக்கியதாகவும், மெர்லினா முடியை வெட்டி மனிததன்மையற்ற முறையில் தன்னை துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி ரேகா போலீசில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை கண்ட பொதுமக்கள் எம்.எல்.ஏ மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினாவை வன்கொடுமை தடுப்புப் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர். இருப்பினும், ஆளுங்கட்சிக் காரர்கள் என்பதால் போலீசார் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது.

பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமி ரேகாவுக்கு நியாயம் கிடைக்க பல்வேறு அமைப்புகளும் அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையெடுத்து ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா மீது 294(b), 324,325,506(1),3(1)(r), 3(1)(s) ஆகிய 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு செய்யப்பட்ட பின் ஆண்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

இந்நிலையில், குற்றவாளிகள் இருவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், இவர்கள் இருவரும் விரைவில் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.