விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி, இ.ஆ.ப,. தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலவலக கூட்டரங்கில் எதிர்வரும் 18.09.2023 அன்று விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பொதுமக்களுக்கும்,
போக்குவரத்திற்கும் எவ்வித பாதிப்பு இல்லாமலும், மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், பின்வரும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி.கிரண் ஸ்ருதி,முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.வளர்மதி தெரிவித்ததாவது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சிலை நிறுவிட சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்துடன் சிலை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் தனியார் இடமாக இருப்பின் நில உரிமையாளர் இசைவுக்கடிதமும், பொது இடமாக இருப்பின் சம்மந்தப்பட்ட துறையின் (உள்ளாட்சித் துறை நெடுஞ்சாலைத் துறை அல்லது எந்தத் துறையை சார்ந்த இடமோ அத்துறையிடம் ஆட்சேபணையில்லாச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒலிபெருக்கி வைப்பதற்கு அனுமதி பெற்றிடல் வேண்டும். கீற்று கொட்டகை அமைத்து சிலை நிறுவுவது தவிர்க்கப்பட வேண்டும். சிலை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் குறித்து தீயணைப்புத் துறையினரின் சான்று பெறப்பட வேண்டும். மேலும் இந்நிகழ்விற்கான மின் இணைப்பு எங்கிருந்து பெறப்படுகிறது என்பதற்கான சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலரின் சான்றுடன் மேற்படி விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பங்கள்
பெறப்பட்டவுடன் உரிய அனுமதி சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர் மூலமாக வழங்கப்பட வேண்டும்.விநாயகர் சிலைகள் எளிதில் நீரில் கரையக்கூடிய வகையிலான களிமண் கொண்டு மட்டுமே செய்யப்பட வேண்டும். இவைகள் மீது வேதியியல் கலந்து வர்ணம் பூசியிருத்தல் கூடாது. சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாரிஸ் சாந்து கொண்டு சிலைகள் செய்யப்படக்கூடாது. இச்சிலை நிறுவுவதற்கான கொட்டகைகள் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய வகையில் உள்ள பொருட்களை பயன்படுத்தாமல், உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனியே வழி ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். விழாக்குழுவினர் தற்காலிக கொட்டகைக்குள், முதலுதவிக்கு தேவையான மருத்துவப்பொருட்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொட்டகைக்கு உட்பகுதியில் வைக்கக்கூடாது. விநாயகர் சதுர்த்தி அன்று நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள சிலைகள் அதன் அடிப்பாகம் உட்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்று மதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் மருத்துவமனைகள் கல்வி நிறுவனங்கள் அருகாமையில் சிலைகள் அமைக்கக்கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி அமைப்பது தவிர்த்து,பெட்டி வடிவிலான ஒலிபெருக்கி,ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். மேலும் ஒலி அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் இருக்க வேண்டும். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் தலா இரண்டு மணி நேரம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இவ்விழா தொடர்பாக
இன்னிசைக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பின் அவற்றின் ஒலி அளவும் அனுமதிக்கப்பட்ட
அளவிற்குள்ளேயே இருத்தல் வேண்டும்.மேலும் விழாக்குழுவினர் சட்டத்திற்கு புறம்பான வகையில் மின்சாரத்தினை பயன்படுத்துவதை தவிர்க்க உரிய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். நிகழ்விடத்தில் எவ்வித அரசியல் கட்சியினர் பேனர்களோ மதத்தலைவர்கள் பேனர்களோ வைத்தல் கூடாது. விழாக்குழுவினர் சார்பாக இரு தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் நிகழ்விடத்தில் இருந்து பாதுகாப்பு பணி மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மின் தடை ஏற்படும்பொழுது மின் வசதி ஏற்படுத்த ஜெனரேட்டர் வசதிகள் செய்திருத்தல் வேண்டும். மற்ற மதத்தினர்களின் வழிபாட்டினை
நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் கோஷங்கள் ஏதும் செய்திடல் கூடாது. பொது அமைதிக்கும், பாதுகாப்பிற்கும், மதசார்பின்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்
அவ்வப்போது வருவாய் காவல் மாசுக்கட்டுப்பாட்டுத் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை
கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும். பந்தல் அமைப்பிற்குள் உள்ள மின் சாதனப் பொருட்கள் அனைத்தும் எளிதில் தீப்பிடிக்காத வகையில் உள்ளதா என தீயணைப்புத் துறையினர் ஆய்வு செய்தல் வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் காவல் வருவாய் உள்ளாட்சி
மாசுக்கட்டுப்பாட்டுத் துறையினரின் ஆலோசனைகளுக்குட்பட்டு அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்கப்பட வேண்டும். சிலை நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள் சிலைகள் கரைப்பதற்கு விழாக்குழுவினர் நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்திடல் வேண்டும். சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலங்கள் நண்பகல் 12 மணிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு காவல்
துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று கரைக்கப்பட வேண்டும். மேலும்
அனைத்து விழா நிகழ்வுகளையும் மாலை 6 மணிக்குள் முடித்துவிடல் வேண்டும். சிலை கரைப்பதற்கு சிலைகளை நான்கு சக்கர வாகனங்கள் அதாவது மினி லாரி டிராக்டர் மூலமாக மட்டுமே ஏற்றிச்
செல்லப்பட வேண்டும் மாறாக மாட்டு வண்டிகள் மீன்பாடி வண்டிகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் ஏற்றிச்செல்லக்கூடாது. வாகனத்தில் ஏறிச்செல்வோர் எண்ணிக்கை மோட்டார் வாகனச் சட்டம் 1980 இன்படி மட்டுமே அனுமதிக்கப்படுவர். சிலைகள் ஊர்வலத்தின்போதோ, கரைக்கப்படும்பொழுதோ எவ்வித வெடிப்பொருட்களும் வெடித்தல் கூடாது. சிலைகளை கரைப்பதற்கு
முன்பு பூ அலங்காரங்கள், அலங்காரப்பொருட்கள் (பேப்பர் மற்றும் பிளாஸ்டிக்) அகற்றப்பட வேண்டும்.மறுசுழற்சி முறையிலான பொருட்கள் தனியாக சேகரிக்கப்பட வேண்டும்.
விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்களில் உள்ளாட்சி துறையினர் மூலம் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மேலும், சிலை கரைக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் உள்ளாட்சி
நகராட்சி மாநகராட்சி துறையினர் நிலை கரைக்கப்பட்ட இடத்தில் குவிக்கப்பட்ட கழிவுகளை
அப்புறப்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டுத் துறையினர் சிலை கரைக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் தண்ணீர் தரம் குறித்து நீர் நிலைகளை சிலை கரைப்பிற்கு முன், சிலை கரைப்பின்போது, சிலை கரைப்பிற்கு பின் என மூன்று வகையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சிலை அமைப்பதற்கான அனுமதி தொடர்பான உத்தரவின் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு மேல்முறையீடு செய்யலாம். சிலை கரைக்கும் இடத்தில் தீயணைப்புத்துறையினர்
மூலமாக மிதவைகள் ஏற்பாடு செய்திடல் வேண்டும். ஒவ்வொரு சிலை கரைப்பு இடத்திற்கும் காவல் துறை, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், மதஒருங்கிணைப்பாளர் களைக் கொண்டு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு நீர் நிலைகள் மாசுபடுவது தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். எளிதில் கரையான வேதிப்பொருட்கள் கொண்ட வர்ணப்பூச்சுகளால் ஆன விநாயகர்
சிலைகளில் ஏற்படும் சுற்றுப்புறச்சூல் கேடுகள், நீர்நிலை மாசுபடுதல் குறித்து பொதுமக்களிடையே மதத்தலைவர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பிரச்சாரம் மேற்கொண்டு பழமையான களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்த வேண்டும். இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி சுற்றுச்சூழல் பாதிப்படையாத வகையில் நெகிழி இல்லாத விநாயகர் சதுர்த்தி விழா நடத்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.வளர்மதி, தெரிவித்தார். இக்கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி (பொ), வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், பாத்திமா, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,
வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.