தென்காசி மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2023- 24- 408 மையங்களில் செப்டம்பர் 1 முதல் துவக்கம்!
தென்காசி மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2023- 24- 408 மையங்களில் செப்டம்பர் 1 முதல் துவக்கம்
 தென்காசி புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், தென்காசி மாவட்டத்தில் பத்து வட்டாரங்களிலும் மொத்தம் 408 கற்போர் மையங்கள் இன்று துவங்கப்பட்டன. தமிழகத்தில் 2011 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்கிடவும், மாநிலத்தின் எழுத்தறிவு சதவீதத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உருவாக்கும் நோக்கிலும் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் திட்டம் 38 மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புற வார்டுகள் மற்றும் கிராமங்களில் 2023-24 ஆம் கல்வியாண்டில் செப்டம்பர் 1 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் 8615 கற்பவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அடிப்படைக் கல்வியை கற்பிக்க 408 தன்னார்வலர்களைக் கொண்டு 408 மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 

செங்கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்த அனந்தபுரம், அரசு தொடக்கப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மைய துவக்க விழாவில், தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் உதவி திட்ட அலுவலர் திரு. சு.சீவலமுத்து கலந்துகொண்டு மையத்தை துவக்கி வைத்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி.ஜா.சுகந்தி திருமதி.பா. ராஜேஸ்வரி, திருமதி.ம. கனக லட்சுமி, கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர், திருமதி. சாந்தி மற்றும் தமிழ்நாடு பெல்லோ ஷிப்பை சேர்ந்த திருமதி விஜீந்திரா ஆகியோர் உடன் இருந்தனர். மையத்தில் சேர்க்கப்பட்டுள்ள கற்போர் அனைவருக்கும் புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கப்பட்டன. மையம் துவக்கவிழா ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணம்மாள் உதவி ஆசிரியர் முருகன் மற்றும் தன்னார்வலர் முத்துமாரி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.