பல்லடம் அருகே குடியிருந்து வரும் 17 வயது சிறுமி 9 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர் சிறுமியை மிரட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி இரு சக்கர வாகனத்தில் கடத்திச்சென்றுள்ளனர்.
பின்னர் காளிவேலம்பட்டி அருகே ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிக்கு கூட்டிச்சென்று அங்கு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனஎ. பின்னர் அந்த சிறுமியை புகைப்படம், வீடியோ எடுத்த மூன்று பேரும் வெளியே சொன்னால் புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனிடையே காட்டுப்பகுதியில் இருந்து வீட்டிற்கு தப்பி வந்த சிறுமி தாயிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ்குமார்(31), ஜான்சன்(26), மற்றும் ஊஞ்சபாளையத்தை சேர்ந்த பார்த்தீபன்(26) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்து கொண்டிருக்கும் கூட்டு பாலியல் வன்கொடுமை தங்கள் ஊரிலும் நடந்ததை எண்ணி பல்லடம் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர். மேலும் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.