இதனை, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, ஓசூர் வணிகவரிக்கோட்ட அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் முன்னிலையில் குத்து விளக்கேற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வணிக வரித்துறையில் தமிழக அளவில் 7 நிர்வாக கோட்டங்கள் மற்றும் 6 நுண்ணறிவு கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியாக தற்போது, சேலம் வணிக வரிக் கோட்டத்திலிருந்து தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய ஓசூர் வணிக வரிக் கோட்டம் உருவாக்கப்பட்டு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கோட்டத்தில், மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டிணம், பர்கூர், போச்சம்பள்ளி, ஓசூர், சூளகிரி, வேப்பனபள்ளி ஆகிய தாலுக்காக்களில் பதிவு பெற்ற வணிகர்கள் பயன் பெறுவார்கள். கிருஷ்ணகிரி வணிகவரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி - 1, கிருஷ்ணகிரி-2, ஓசூர் தெற்கு-1, தெற்கு - 2, தெற்கு- 3 மற்றும் ஓசூர் வடக்கு - 1, வடக்கு - 2 ஆகிய 7 வணிக வரி சரகங்கள் செயல்படும்.ஓசூரில் உருவாகியுள்ள புதிய கோட்டத்தில் 2022 - 2023-ல், ரூ. 7 கோடியே 46 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இக்கோட்டத்தில் மொத்தம் 25,367 வணிகர்கள் பதிவு பெற்றுள்ளனர். பெருவாரியான வரி செலுத்தும் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி வணிகர்களின் நலனை கருத்தில்கொண்டு, இந்த புதிய கோட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா, வணிகவரித்துறை இணை ஆணையர்கள் நாராயணன் (நிர்வாகம்), ஜெயராமன் (நுண்ணறிவு), துணை ஆணையர்கள் ஹேமா (கிருஷ்ணகிரி), சங்கரமூர்த்தி மற்றும் உதவி ஆணையர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.