வத்தலகுண்டு பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு மாம்பழங்களை கொண்டு மரக்கன்றுகள் உருவாக்குதல்.!
வத்தலகுண்டு பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு மாம்பழங்களை கொண்டு 5,000 மரக்கன்றுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம். வத்தலகுண்டு பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு மாம்பழங்களை கொண்டு பசுமை பூங்காவில் 5,000 மரக்கன்றுகளை உருவாக்கி பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு வழங்கிய வருகிறது.
வத்தலக்குண்டு பகுதியில் மாம்பழ சீசன் களைகட்ட தொடங்கியது முதல் காய்கறி சந்தைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு மாம்பழங்கள் மற்றும் வீடுகளில் பிரித்து வாங்கப்படும் உணவு கழிவிலிருந்து சேகரிக்கப்படும் மாம்பழங்களை கொண்டு மா கன்றுகளை உற்பத்தி செய்யும் முயற்சியில் வத்தலகுண்டு பேரூராட்சித் தலைவர், செயல் அலுவலர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் முதல் கட்டமாக தூய்மை பணியாளர்கள் மூலம் நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு மாம்பழங்கள் பேரூராட்சி பசுமை பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டு மாம்பழ விதை தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது.
பின்னர் அந்த விதைகள் உலர வைக்கப்பட்டு நடவுக்கு தயார் செய்யப்படுகின்றன, நன்கு உலர்ந்த மாம்பழ விதைகளை பசுமை பூங்காவில் உள்ள காலியிடங்களில் நடவு செய்யும் பணியை தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்கின்றனர்.

நாள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இடங்கள் விதம் பாத்தி கட்டி மாம்பழ விதைகள் நடவு செய்யப்படுகின்றன . செடிகளாக வளர்ந்து வரும் மாங்கன்றுகளை விதைகளோடு சேர்த்து பெயர்த்து எடுத்து பின்னர் விதைப்பைகளில் போட்டு மா கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

கூட்டாஞ்சோறு போல் நாள்தோறும் வந்துவிழும் பல ரக மாம்பழங்கள் இங்கு நடவு செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இதே போல் இந்த பசுமை பூங்காவின் பெயரை காப்பாற்றும் விதமாக வெற்றிலை நாற்றுகள் அதிகளவில் நடவு செய்யப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் பேரூராட்சி நிர்வாகம் தயார் படுத்தி வைத்துள்ளது.

தூக்கி வீசப்படும் மாம்பழம் விதை தானே என்ற எண்ணம் இல்லாமல் அதனை பயனுள்ள மரக்கன்றுகளாக உருவாக்கி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வத்தலக்குண்டு பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் விவசாயிகள் பெரும் பாராட்டை தெரிவித்துள்ளனர்.