3 வருடங்களில் 25,899 வீடுகள்: நகர்ப்புற வாரியம் அபாரம்.!
தமிழகத்தில், மத்திய, மாநில அரசு நிதி அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டங்களில், மூன்று ஆண்டுகளில், 25,899 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமரின் வீட்டுவசதி திட்டம், உலக வங்கி திட்ட நிதியில், குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இவற்றில், 40 முதல், 50 சதவீத தொகையை, தமிழக அரசு வழங்குகிறது, 10 சதவீத நிதி, பயனாளிகளிடம் இருந்து பெறப்படுகிறது.

மத்திய அரசு மற்றும் உலக வங்கி திட்ட பணியில் ஏற்படும் முன்னேற்றம் அடிப்படையிலேயே, அடுத்தடுத்த தவணை நிதி பெற முடியும். இதனால், கட்டுமான பணிகள், தற்போது விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.

இந்த வகையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில், கடந்த 3 ஆண்டுகளில், 25,899 வீடுகள் ஒதுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. கடந்த, 2021 - 22 நிதி ஆண்டை விட, 2022 - 23ல் வீடுகள் ஒதுக்கீடு, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கட்டி முடிக்கப்பட்ட நிலையில், 10,000 வீடுகள் இருப்பதால், நடப்பு ஆண்டில் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுதும் ஏழை மக்களுக்கான குடியிருப்புகள் கட்டும் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, ஒதுக்கப்பட்ட வீடுகள் எண்ணிக்கை, 32 ஆயிரத்தை கடந்து இருக்கும். திட்ட வாரியாக வீடு ஒதுக்கீட்டு விபரங்களை, 'அப்டேட்' செய்து வருகிறோம். கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை, உடனுக்குடன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.