நிலத்தை வீட்டுமனை பிரிவாக மாற்றிட ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்ட ஊராட்சி தலைவர் விஜிலென்ஸ் போலீசாரால் அதிரடி கைது
செங்கல்பட்டு மாவட்டம். மதுராந்தகம் அருகே உள்ள இலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது சீவாடி ஊராட்சி. இதன் ஊராட்சி மன்றத் தலைவராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ரங்கநாதன் உள்ளார்.

சீவாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சென்னையை சேர்ந்த அப்துல்லா என்பவர் நிலம் வாங்கி இருந்தார். அந்த நிலத்தை வீட்டுமனை பிரிவுகளாக மாற்றுவதற்காக ஊராட்சியின் அங்கீகாரம் பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தார்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், அந்த வீட்டு மனை பிரிவாக மாற்ற அங்கீகாரம் வழங்குவதற்கு ரூ.25 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலத்தின் உரிமையாளர் அப்துல்லா சென்னையில் உள்ள ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். 

லஞ்சஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தல்படி அப்துல்லா முன்பணத்தை வழங்குவதாக கூறி நேற்று மாலை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ரங்கநாதனிடம் ரசாயனம் தடவிய ரூபாயை கொடுத்தார்.

அதனை ரங்கநாதன் வாங்கியபோது மறைந்து இருந்த சென்னையில் இருந்து வந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்று வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.