தேனி, பண்ணைப்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்: கலெக்டர் அதிரடி
பண்ணைப்புரத்தில் கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2 மாணவிகள் பலியான சம்பவத்தை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.
 தேனி 2 மாணவிகள் பலி உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 7-வது வார்டில் பெண்கள் கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடம் அருகில் மரத்தடியில் பாவலர் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் மகள் நிகிதாஸ்ரீ (வயது 7), ஜெகதீசன் மகள் சுபஸ்ரீ (6) இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் முறையே 1, 2-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் விளையாடிக் கொண்டு இருந்தனர். அங்குள்ள கழிப்பிட கழிவுநீர் தொட்டியின் மேல் மூடி சேதம் அடைந்து இருந்தது. விளையாடியபோது கழிவுநீர் தொட்டியின் மேல் குதித்து விளையாடிக் கொண்டிருந்தபோது அது கழிவுநீர் தொட்டியின் மேல்முடி உடைந்து மாணவிகள் இருவரும் தொட்டிக்குள் தவறி விழுந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து மாணவிகளை தொட்டிக்குள் இருந்து மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். சம்பவம் மிகவும் பரபரப்பான நிலையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலும் செயல் அலுவலர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அதிரடி உத்தரவு விட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தமபாளையம் ஆர்.டி.ஓ.வுக்கு கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். கழிப்பிட தொட்டியின் மூடி பழுதாகி இருந்தும் அதை சீரமைக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று கூறப்பட்டது. இதையடுத்து பண்ணைப்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, இளநிலை பொறியாளர் வீரமணி, இளநிலை உதவியாளர் வெள்ளைச்சாமி ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முரளிதரன் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து கலெக்டரிடம் கேட்டபோது, "இது துயரமான சம்பவம். அதிகாரிகள் 3 பேர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்துக்கு நிவாரணம் கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்றார்.