பெண்கள் கர்ப்பகாலத்தில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் எது நல்லது எது கெட்டது என அறிவோம்
• Bharathaidhazh
கர்ப்பகாலத்தில் வலிமையான, ஆரோக்கியமான அடுத்த சந்ததியை உருவாக்குவதற்கு சத்துக்கள் மிகமிக அவசியம்.
சினைப்பை நீர்க்கட்டி, தைராய்டு சுரப்பி கோளாறுகள், கருப்பை கட்டிகள், ஹார்மோன் மாறுபாடுகள் இவற்றால் ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை மருத்துவ முறைகளால் சீர்செய்து, தாமதமாகும் கருத்தரிப்பை துரிதமாக்கி, கருச்சிதைவு இன்றி பாதுகாத்து பிரசவம் வரை கொண்டு செல்வது என்பது மகளிர்க்கு மற்றொரு சவால். மாதவிடாய் துவங்கியது முதல் மகப்பேறு, இறுதிபூப்பு வரை உள்ள நோய்க்குறிகள் பெண்களின் ஆரோக்கியத்துக்கு அடுத்தடுத்த சவால் மிகுந்த காலம் ஆகும். இதனால் அவர்களுக்கு பல்வேறு உடலியல் மற்றும் மனவியல் மாறுபாடுகள் ஏற்படுகின்றது. அவை அனைத்தையும் கையாண்டு ஆரோக்கியத்தை நிலைநாட்ட சத்தான உணவு அவசியமாகின்றது. முக்கியமாக கர்ப்பகாலத்தில் வலிமையான, ஆரோக்கியமான அடுத்த சந்ததியை உருவாக்குவதற்கு சத்துக்கள் மிகமிக அவசியம். இன்று நவீன அறிவியல் கூறும் சத்தான உணவுப்பொருட்கள் என்பது சர்க்கரைச்சத்து. புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஐந்தும் தான். இவை நம் உடலின் செல்களின் செயல்பாட்டுக்கு மிகமிக அத்தியாவசியமானவை. ஆச்சர்யம் என்னவெனில், இவை அனைத்துமே நாம் பயன்படுத்த மறந்த பாரம்பரிய உணவுகளில் மண்டிக்கிடக்கின்றது. "வாயும் வயிறுமா இருக்கியே, வயித்துல இருக்கிற புள்ளைக்கும் சேர்த்து சாப்பிடணும்" என்று நம் பாட்டி காலம் முதல் பழகி வந்தவை நம் பாரம்பர்ய உணவுகள். இன்றைய அறிவியல் கூறும் சுண்ணாம்பு சத்தும் (கால்சியமும்), இரும்புச்சத்தும் கர்ப்ப காலத்தில் மிகவும் அவசியம் என்பதை பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து அத்தகைய சத்துக்கள் இருக்கும் உணவு முறைகளை வழங்கி இயற்கையான முறையில் ஆரோக்கியத்திற்கு வித்திட்டனர். புரதச்சத்துக்கள் உடலின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒன்று. மகப்பேறு காலத்தில் பெண்கள் புரதசத்தினை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே உடல் உறுப்புகள் வளர்ச்சியை அதிகரிக்கும். கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு கிட்டத்தட்ட 10 கிலோகிராம் வரை எடை கூடும். அதற்கு புரதம் சிறந்த உணவு. சைவபிரியர்களுக்கு பட்டாணி வகைகள், முளைகட்டிய தானியங்கள், பயறு வகைகள் இவற்றிலும், அசைவப்பிரியர்களுக்கு மீன், முட்டை, கறி வகைகள் இவற்றிலும் அதிக அளவு புரதம் உள்ளது குறிப்பிடத்தக்கது. நமது பாரம்பரிய பருப்பு வகையான உளுந்து மற்றும் பாசிப்பயறில் அதிகம் புரதம் உள்ளது. ஆதலால் மாதவிடாய் துவங்கியது முதல் பெண்கள் தோலுடன் உள்ள கருப்பு உளுந்தை வடையாகவோ அல்லது பனைவெல்லம் சேர்த்த கஞ்சியாகவோ எடுத்துக்கொள்ளலாம். உளுந்து பெண்களுக்கு இடுப்புக்கு அதிக வலிமையை தரும் என்கிறது சித்த மருத்துவம். இதனை 'இடுப்புக்கடு பலமாம்' என்கிற அகத்தியர் குணவாகடப்பாடல் வரிகளால் அறியலாம் பாசிப்பயிறு எனும் சிறந்த போஷாக்கு அளிக்கும் பருப்பு வகையை பொங்கலில் சேர்த்து எடுத்துக்கொள்வது நம் மரபு. பொங்கல் என்பது கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி, புரதம் நிறைந்த பாசிப்பயிறு, கொழுப்புச்சத்து நிறைந்த நெய் இவை மூன்றும் கலந்த சரிவிகித உணவாக உள்ளது. சரிவிகித உணவு பற்றி இன்றைய அறிவியல் பேசும் முன்னரே, பொங்கலை உணவாக படைத்தது நமது பாரம்பரிய உணவுமுறையின் சிறப்பு. சர்க்கரைச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட்கள் உடலுக்கு முதன்மை ஆற்றலை அளிக்கும் தன்மையுடையன. மாவுப்பொருட்கள் எல்லாவற்றிலும் இருப்பது இந்த சர்க்கரை சத்துக்கள் தான். சர்க்கரை சத்துக்கள் அரிசி வகைகளிலும், பழங்களிலும் அதிகம். ஆனால், பழங்களில் சர்க்கரை சத்துக்களுடன் எண்ணற்ற தாது உப்புக்களும், வைட்டமின்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த இயற்கை நிறமிகளும் அதிகம் உள்ளது. இயற்கை நிறமிகள் பழங்களில் அதிகம் கிடைக்கின்றது. ஆக, 'மாசமா இருக்கும் போது மாதுளை சாப்பிட்டால் பிறக்கிற குழந்தை நல்ல கலர்ல இருக்குமாம்' என்பதை வேடிக்கை மொழியாக பார்க்காமல், ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த மாதுளையை பெண்கள் எடுத்துக்கொண்டால், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். ஆரோக்கியம் தானே அழகு. அதற்குத்தான் இந்த மறைமொழி. கர்ப்பம் தரித்த பெண்கள், சர்க்கரைச்சத்து நிறைந்த தீட்டப்பட்ட அரிசியை எடுத்துக்கொள்வதை விட பாரம்பரிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்வது நல்லது. பூங்கார் அரிசி சர்க்கரை சத்தினை மட்டும் கொண்டிராமல் அதிக அளவு இரும்புச்சத்தினையும் கொண்டுள்ளது. மாதம்தோறும் ரத்தஇழப்பினை சந்திக்கும் பெண்களுக்கு இரும்புசத்து தேவையான ஒன்று. அதனை பூங்கார் அரிசி பூர்த்தி செய்யும். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான சுண்ணாம்பு சத்து எனும் கால்சியம் அதிகம் உள்ள பாரம்பரிய அரிசி வகை குழியடிச்சான் அரிசி, அதிகம் கால்சியத்தை கொண்ட மற்றொரு அரிசி வகை நீலம் சம்பா அரிசி. பெரும்பாலான பாரம்பரிய அரிசி வகைகள் பெண்களுக்கு மட்டுமல்ல அனைவரின் உடலுக்கும் தேவையான அத்தியாவசிய சத்துக்களை இயல்பாகவே கொண்டுள்ளன. இதைப் பயன்படுத்திய நமது மூதாதையர்கள் சத்துக்கு தனி மாத்திரை மருந்துகளை உண்ணாமல் வாழ்ந்தது உலகறியும் வரலாறு. சத்தான உணவைப் பயன்படுத்த மறந்த நாம், சக்கையை உணவாக அருந்தி மாத்திரைகளை நம்பி வாழ்நாளை கடத்துகிறோம் என்பது தான் உண்மை. கொழுப்பு பொருட்கள் அதிக அளவு சக்தியை தரக்கூடியது. நரம்பு மண்டலத்தின் செயர் பாட்டுக்கும், உடலை காக்கவும், உடல் அழகுக்கும் அவசியமானது. நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பில் கரையும் வேதிமூலக்கூறுகள் கொழுப்புச்சத்துள்ள உணவுப்பொருட்களை எடுத்துக்கொண்டால் மட்டுமே உடல் பெறமுடியும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல பலத்தை தரும். பாலில் புரதச்சத்தும், கொழுப்பு சத்தும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக எண்ணெய் வகைகளில் கொழுப்பு சத்துக்கள் அதிகம். சித்த மருத்துவம் எண்ணெய் என்று குறிப்பிடுவது எள்ளின் நெய்யை தான். நல்ல எண்ணெய் என்ற பெயரைக்கொண்ட எள்எண்ணெய் பெண்களுக்கு மிகசிறந்த பலனைத் தரக்கூடியது. சமையலில் நல்லெண்ணையை பயன்படுத்தினால் புற்றுநோயை தடுக்க முடியும் என்கிறது சில ஆய்வு முடிவுகள். எள்ளு உருண்டையை எடுத்துக்கொள்வதன் மூலமும் பெண்களுக்கு அத்தகைய சத்துக்கள் கிடைக்கும். எள் எலும்புகளுக்கு மிகசிறந்த உணவு. எள்ளுருண்டைகளை பாரம்பரிய கால்சியம் சத்து உருண்டைகள் என்றே சொல்லலாம். இதனை 'எறனெலாம் திண்மை தரும்' என்கிறது சித்த மருத்துவ பாடல் வரிகள். எலும்புகளை, மூட்டுகளை வன்மையாக்கும் கால்சியம் சத்துக்கள் நிறைந்த எளிய உணவு கேழ்வரகு. ஏழை எளிய மக்களுக்கு உன்னதமான நண்பன் என்பதாலே இதற்க்கு 'பஞ்சந்தாங்கி' என்ற வேறு பெயரும் உண்டு. இதனை மகப்பேறு காலத்தில் பெண்கள் அவ்வப்போது பனைவெல்லம் சேர்த்து உருண்டையாக்கி எடுத்துக்கொள்வது நல்லது. எளிமையாக கிடைப்பதாலோ, என்னமோ? இதன் மகத்துவமும், மருத்துவக்குணமும் பலருக்கு தெரிவதில்லை. அந்த வகையில் பயன்படுத்த மறந்த மற்றொரு பாரம்பரிய சிறுதானிய உணவு தினை. இதனுடன் அவ்வப்போது நெய், பனைவெல்லம் சேர்த்து தினைமாவு உருண்டையாக எடுத்துக்கொண்டால் எலும்புகள் வலுப்படும். இரும்பு சத்து உடலின் ரத்தத்துக்கு அவசியமான ஒன்று. மகப்பேறு காலத்தில் பெண்கள் இரும்பு சத்து மாத்திரைகளை எடுப்பதுடன் அதிக இரும்பு சத்து மிக்க முருங்கைக்கீரையை, ஈர்க்குடன் சேர்த்து அவ்வப்போது சூப் செய்து எடுத்துக்கொள்ளலாம். கறிவேப்பிலை மற்றும் ஈர்க்கும் அதிக இரும்புச்சத்தினை கொண்டது. பப்பாளி, அத்திபழம் ஆகிய நம் நாட்டு நார்ச்சத்துள்ள பழங்களை எடுத்துக்கொள்வதும் சத்துகுறைப்பாட்டை பூர்த்தி செய்யும். வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லி,கொய்யா ஆகிய பழங்களையும், கண் பார்வைக்கு வித்திடும் வைட்டமின் ஏ அதிகமுள்ள மாம்பழம் மற்றும் முருங்கை கீரை, கறிவேப்பிலை ஆகிய எளிமையாக கிடைக்கும் சித்த மருத்துவ மூலிகை உணவுப்பொருட்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு பாதை அமைக்கும். வைட்டமின் சி உள்ள பழங்கள் நமது உடலில் இரும்புசத்து உட்கிரகித்தலை அதிகமாக்கும் தன்மை உடையது என்கிறது நவீன அறிவியல். இதனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்த நம் முன்னோர்கள் இரும்புசத்து மிக்க அய செந்தூரம், அன்னபேதி செந்தூரம் ஆகிய மருந்துகளை நெல்லிக்காய் சேர்ந்த திரிபலை சூரணத்துடன் உட்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர் என்பது அறிவியலே வியக்கும் வண்ணம் உள்ளது. வைட்டமின் டி-3 எனும் சத்து, தாய்க்கும், கருவில் வளரும் சேய்க்கும் எலும்புகளை வலுப்படுத்த உதவும். இயல்பாகவே குறைந்தது 15 நிமிடங்கள் வரை தோலினை வெயில் படும்படியாக செய்வது தேவையான வைட்டமின் டி சத்தினை தோலில் உற்பத்தி செய்யும். உணவுமுறைகளில் அவ்வப்போது சுண்டைக்காயை வற்றலாக்கி பயன்படுத்தினாலும் வைட்டமின்-டி உடலுக்கு கிடைக்கும். மாமிச வகைகளில் ஒமேகா-3 சத்துக்கள் நிறைந்த மீன் வகைகள் மகவின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இன்றைய நவீன அறிவியல் கூறும் ஜிங்க், மெக்னீசியம், செலினியம் ஆகிய பல சத்துக்களும், போலிக் அமிலம் போன்ற எண்ணற்ற வைட்டமின்களும் நாம் பாரம்பரியமாக பழகி வந்த உணவு முறைகளில் கணக்கில்லாமல் கிடக்கின்றது என்பது தான் உண்மை. அதை விடுத்து கர்ப்ப காலத்தில் பெண்கள் சத்துக்கள் இல்லாத, உடலுக்கு கேடு விளைவிக்கும் தன்மையுடைய துரித உணவுகளை விரும்பி எடுத்துக்கொள்வது கருவில் உள்ள மகவின் ஆரோக்கியத்தை கெடுப்பது போன்றது. அவ்வகை உணவுகளை நாகரிக வாழ்வியலில் வாழும் பெண்கள் அறவே தவிர்க்க வேண்டும். வழிவழியாய் மகப்பேற்றின் சீமந்த விழாவில் பெண்களுக்கு சத்தான சிகப்பரிசியும், கம்பு உருண்டையும் கொடுத்து தாய்க்கும், சேய்க்கும் போஷாக்களித்து பலம் சேர்ப்பது நமது பாரம்பரிய உணவுமுறைக்கு உதாரணம். மொத்தத்தில் இரும்பு சத்து, கால்சியம்,மெக்னீசியம்,பொட்டாசியம், பாஸ்பரஸ், ஜின்க் சத்துக்கள் என சத்துக்களின் கூடாரமாக உள்ளது சிகப்பரிசி வகை. சித்த மருத்துவ கூற்றுப்படி சப்த தாதுக்களை வன்மைப்படுத்த அனைவருக்கும் சத்தான உணவு அவசியம். சத்தான உணவு உண்பது தாய்க்கு மட்டுமல்ல கருவுக்கும் வளர்ச்சியை கொடுத்து வருங்கால சந்ததியினை ஆரோக்கியமாக உருவாக்க வழிவகை செய்யும். உண்மையில் நம் பாரம்பரிய உணவு முறைகள் நம் நாட்டு மருத்துவத்தின் ஒரு அத்தியாயம்.
No,1. Nehru street senguttai dharapadavedu Katpadi taluk
About
We publish Every news Edition with Colourful Pages of main motive we publish advertisement to promote business.Especially we cover Educational News, Devotional News and Medical, Sports Birthdays Annual Functions etc..