தென்னிந்திய. நடிகர் சங்கம் பிறந்த கதை!
தென்னிந்திய. நடிகர் சங்கம் பிறந்த கதை!

எம்.ஜி ராமச்சந்திரன் ஜானகி அம்மாள் ..
மருதுபாண்டியர் கதையைத் திரைப்படமாக எடுப்பதாகப் பத்திரிகையாளர்களுக்குச் செய்தி கொடுங்கள்” என்று அந்த நடுநிசியிலே கவியரசர் கண்ணதாசனோடு தொலைபேசியில் பேசினார் தலைவர். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

அமரர் டி.கே.சண்முகம் அண்ணாச்சி அவர்கள் கண்கலங்க மகிழ்வோடு, “உங்கள் இருவரை வைத்துப் படம் எடுப்பவர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுணுக்கக் கலைஞர்கள் என்று இத்துறையில் சம்பந்தப்பட்ட பல குடும்பத்தாருக்கு இதன்மூலம் வாழ்வளித்து உள்ளீர்கள்” என்று வாழ்த்தி விட்டுச் சென்றார். அண்ணாச்சி சென்ற பிறகு அன்று வெகு நேரம் புரட்சித்தலைவர் கண் விழித்திருந்தார்.

“நடிகர் திலகத்திற்கும்- எனது அன்புத் தலைவருக்கும் இடையில் பெரிய தயாரிப்பாளர்கள் இப்படி குறுக்கீடு செய்தார்கள் அல்லவா? இந்த மாதிரி நபர்கள் திரைப்படத் தொழிலில் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ தொழில்களில், அரசியலில் கூட இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களிடம் இருந்து நாம் விடுபட்டாக வேண்டும். இல்லையேல் நம்மையும் நாட்டையும் அழித்து விடுவார்கள்” என்று அடிக்கடி அந்தச் சம்பவத்திற்குப் பிறகு சொல்ல ஆரம்பித்தார்.

எனக்குத் தெரிந்த அளவில் திரு.கே.எஸ் என்று மரியாதையோடு அன்புத் தலைவர் அவர்களால் அழைக்கப்பட்ட பழம்பெரும் இயக்குனர் சுப்பிரமணியம் முதலில் இயக்கிய திரைப்படம் ‘பவளக்கொடி' என்னை சினிமா உலகத்திற்கு அறிமுகப்படுத்தியதெல்லாம் இந்த டைரக்டர் கே.சுப்ரமணியம் தான்.

அந்தக் காலத்தில் அவருடைய நடன கலா சேவாவின் மாணவிகளில் ஒருத்தியான எனக்கு எல்லா வகை நாட்டியங்களிலும் பரிச்சயமும் தேர்ச்சியும் இருந்தது.

அமரர் டைரக்டர் கே.சுப்பிரமணியம் மீது அளவிட முடியாத அன்பும் பாசமும் மரியாதையும் வைத்திருந்தவர் நமது தலைவர். அமரர் கே.எஸ் அவர்களை என் கணவர் எவ்வளவு தூரம் அறிந்தவர் என்பதற்கு எனது தலைவர் அவரைப் பற்றி குறிப்பிட்டவைகளே சான்று.

“திரையுலகில் டைரக்டர் சுப்பிரமணியம் என்று சொன்னால் அனைவரும் தெரிந்து கொள்வார்கள். ஆனால் அவர் ஒரு வழக்கறிஞர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், எழுத்தாளர், இசையை அறிந்தவர், பொதுவுடமைவாதி, உண்மையான காங்கிரஸ்காரர், ஜாதி உணர்வற்றவர், தொழிலாளி, எதிரிகளையும் அரவணைக்கும் அன்பாளர், வள்ளல், கடிந்து பேசாதவர். ஆனால் மனதில் நியாயம் எனப்பட்டதை ஒளிவு மறைவின்றி சம்பந்தப்பட்டவரிடமே சொல்லுபவர்” என்றெல்லாம் இந்தத் தோட்டத்து நாயகரால் மரியாதையோடு போற்றிப் பாராட்டப்பட்டவர் டைரக்டர் சுப்பிரமணியம்.

இவர்தான் பாகவதரும், கலைவாணரும் கைதுசெய்து சிறையில் வைக்கப்பட்ட பொழுது பல்வேறு முயற்சிகளை அவர்களுக்காக எடுத்தவர்.

இப்பொழுது தென்னிந்திய நடிகர் சங்கம் என்று குறிப்பிடும் அமைப்பை உருவாக்குவதற்கு ஆதி காரணகர்த்தாவும் அவர்தான். பல்வேறு நிலைகளில் பல்வேறு பெயர்களில் இந்தச் சங்கம் தொடங்கி மாறிமாறி வந்து நமது அன்புத் தலைவர் மற்றும் அவரைப் போன்றவர்களின் யோசனைப்படிப் பெயர் மாற்றப்பட்டு இப்போது நிலைத்திருப்பதுதான் தென்னிந்திய நடிகர் சங்கம்.