ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது வழக்கம். உலகியல் நடைமுறைக்கு கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான விதியாகும்
ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது வழக்கம். உலகியல் நடைமுறைக்கு கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான விதியாகும்

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பொருத்தம் பார்த்து திருமணம் செய்வது வழக்கம். பல முறை பொருத்தம் பார்த்து நடத்திய திருமணங்களில் சில தோல்வியை சந்திப்பதையும், பொருத்தமே பார்க்காமல் நடந்த சில திருமணங்கள் வெற்றியைத் தருவதையும் சுமூகமாக சென்று கொண்டு இருந்த சிலரின் திருமண வாழ்க்கை உப்புக்கு பெறாத காரணத்திற்காக பிரிவதையும் நடைமுறையில் பார்க்கிறோம். முறையான திருமணப் பொருத்தம் என்பது கட்டப் பொருத்தமாகும். கட்டப் பொருத்தம் சரியாக இருந்தாலும் தசா- புத்தியே திருமண வாழ்வில் மிக முக்கியம்.ஜனன காலத்தில் அமையும் கிரக நிலைகளால் மனிதனின் விதியானது நிர்ணயிக்கப்படுகிறது, என்றாலும் அந்த விதிப்பயனை ஜாதகர் எந்த காலகட்டத்தில் அனுபவிப்பார் என்பதை தசாபுத்தியே நிர்ணயிக்கிறது. அத்துடன் திருமணம் நடைபெறுவது, தடை பெறுவது, தாமதமாவது, விவாகரத்து, மறுமணம் அனைத்தும் தசா - புத்தியின் கையிலேயே இருக்கிறது. இதை மேலும் புரியும் விதமாக சொன்னால் எந்த தோஷமும் இல்லாத சுத்த ஜாதகம் கூட திருமண வாழ்க்கையில் தோல்வியை தழுவ தசா புத்தியே காரணமாகிறது. தசா - புத்திக்கு முக்கியத்துவம் தராமல் பார்க்கும் திருமணப் பொருத்தம் மன சங்கடத்தை தருகிறது என்பது நிதர்சனமான உண்மை. திருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும் போது சில குறிப்பிட்ட விதிகளின்படி தசா, புத்தி பொருத்தம் இருப்பது உத்தமம். அதன்படி 1. ஆண் - பெண் இருவருக்கும் ஒரே தசா திருமணமாகி 15 ஆண்டுகள் வரை வராமல் இருப்பது சிறப்பு. இதை தசா சந்திப்பு என்றும் கூறுவார்கள். இது தற்கால உலகியல் நடைமுறைக்கு கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான விதியாகும்.நமது முன்னோர்கள் குறைந்தது 5 முதல் 12 வயது வித்தியாசத்திலேயே திருமணம் நடத்தினார்கள். நாகரீக உலகில் ஒரே வயது, ஒரிரு வருட வித்தியாசத்தில் பிறந்தவர்களுடன் திருமணம் நடப்பது அதிகரித்து விட்டது. முடிந்த வரை 3 ஆண்டுகளாவது இடைவெளி இருக்க வேண்டும். மேலும் காலத்திற்கு ஏற்ப பலன் சொல்ல வேண்டிய சூழல் நிலவுவதால் ஒரே தசை நடந்தாலும் அவை சுபமானதாக இருந்தால் திருமணம் செய்யலாம் . புத்திகள் மட்டும் ஒரே விதமாக குறிக்கிடாமல் இருப்பது நல்லது. 2. திருமணத்தின் போது ஆண், பெண் இருவரில் ஒருவருக்காவது கேந்திர, திரிகோண அதிபதிகளின் தசை நடக்க வேண்டும். தீய பலன்களை தரும் தசை நடந்தால் கட்டப் பொருத்தம் இருந்தாலும் மண வாழ்வு சங்கடம் தரும். 3. இருவரின் ஜாதகத்திலும் பகை கிரகங்களின் தசை நடந்தால் கருத்து வேறுபாடு, பிரிவினை அதிகரிக்கும். தசா நாதர்களை விட நட்சத்திர நாதர்கள் பகை கிரகமாக இல்லாமல் இருக்க வேண்டும். கோர்ட் வாசலில் நிற்கும் பல தம்பதிகளின் ஜாதகத்தை ஆய்வு செய்தால் ஜாதகத்தில் எந்த பிரச்சினையும் தென்படாது. தம்பதிகளுக்கு தசையை நடத்தும் கிரகம் பகை கிரகங்களாக இருக்கும் அல்லது தசையை நடத்தும் கிரகம் நின்ற நட்சத்திரம் பகை கிரக நட்சத்திரமாக இருக்கும். தசையை நடத்தும் கிரகத்தை விட தசையை நடத்தும் கிரகம் நின்ற நட்சத்திரத்திற்கு வலிமை அதிகம். பலர் கேந்திர திரிகோணதிபதிகள் தசை நடக்கும் போது கூட சந்திக்கும் இடர்பாடுகளுக்கு தசை நடத்தும் கிரகம் நிற்கும் நட்சத்திரமே காரணமாக அமைகிறது. திருமணம் முடிந்து பல வருடங்களான தம்பதிகள் கூட பகை கிரகங்களின் தசை புத்தி காலங்களில் கருத்து வேறுபாட்டை சந்திக்கின்றனர். எனவே பகை கிரகங்களின் தசை நடக்கும் ஆண், பெண் ஜாதகங்களை இணைப்பதை இயன்றவரை தவிர்த்தால் தம்பதியர்கள் அன்புடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். சூரியன் + ராகு/கேது சூரிய தசை நடந்தால் ராகு/கேது தசை நடப்பவரை திருமணம் செய்யக் கூடாது. இந்த கிரக சம்பந்தம் கிரகண தோஷம். ஆண், பெண் இருவருக்கும் பிரச்சினைகள் தரும். கவுரவத்தை குறைக்கும். ஊர், உலகத்திற்காக வாழ நேரிடும். அரசு வகை ஆதரவை தடை செய்யும். ஆண் வாரிசு குறையும். இது போன்ற பகை கிரக தசை புத்தியால் சிரமங்களை சந்திக்கும் தம்பதிகள் கிரகண காலங்களில் பித்ரு தர்பணம் செய்ய விரைவில் சுப பலன் கிட்டும். சந்திரன்+ புதன் இந்த பகை கிரக தசை புத்தி காலங்களில் நரம்பு, தோல் சம்பந்தப்பட்ட நோய் உருவாகும். சிலருக்கு மனநோய், மன அழுத்தம் ஏற்படும். சிலருக்கு இந்த தசை புத்தி திருமணத்திற்கு பிறகு தவறான நட்பை ஏற்படுத்துகிறது. மனசஞ்சலத்தால் எளிதில் கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இந்த தசை புத்தியால் சிரமத்தை சந்திக்கும் தம்பதிகள் புதன் கிழமை சக்கரத்தாழ்வாரை 108 முறை வலம் வர வேண்டும். சந்திரன் + சுக்கிரன் சந்திரன் மாமியார்,சுக்கிரன் மருமகள். இந்த தசை, புத்தி காலங்களில் ஆண் பெண் இருவருக்கும் மாமியார் டார்ச்சர் உண்டு. சந்திரன் வலிமை குறைந்து இருக்கும் மருமகளை மாமியார்கள் பிறந்த வீட்டிற்கு அனுப்ப எந்த பழியையும் சுமத்த தயங்குவதில்லை. சுக்கிரன் வலிமை படைத்த பெண்கள் மாமியாரை வீட்டு வேலை செய்யும் அடிமையாக்கி விடுகிறார்கள். ஆண்கள் மனைவியின் அன்பிற்காக மாமியாரை அனுசரித்து வாழும் நிலையை ஏற்படுத்துகிறது. பிடிக்காத மாமியாருக்காக மனைவியை புகுந்த வீட்டிற்கே அனுப்பாமல் இருக்கும் கணவரும் உண்டு. இந்த அமைப்பு பிறந்த வீட்டு பெண்ணிற்கும், புகுந்த வீட்டுப் பெண்களுக்கும் மனஸ்தாபத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கணவன், மனைவி உறவில் விரிசல் ஏற்படுகிறது. சிலருக்கு பண இழப்பு மிகுதியாக இருக்கும். இது போன்ற அவஸ்தை இருக்கும் தம்பதிகள் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மேல் பச்சரிசி மாவில் மாவிளக்கு தீபம் ஏற்றி மாரியம்மனை வழிபாடு செய்ய வேண்டும். சந்திரன் + சனி சந்திர தசை, சனி தசை நடக்கும் ஜாதகத்தை பொருத்தக் கூடாது. ஆண், பெண் இருவரையும் திருமணத்திற்கு முன்னும், பின்னும் பாதிக்கும். வாழ்கையில் தடை, தாமதத்தை அதிகம் தருகிறது. காலாகாலத்தில் எதுவும் நடக்காது. எல்லாம் கால தாமதமாகவே நடக்கும். தாமதத் திருமணம், மன உளைச்சல் நிம்மதியின்மை, தாயார் வழி விரயம், வியாதி, அடிக்கடி தொழில், வேலையை மாற்றுதல் இருக்கும். கால்சிய சத்து குறைவு, மூட்டு தேய்மானம் போன்ற அவஸ்த்தையை தரும். இவர்கள் சனிக்கிழமைகளில் பசுவிற்கு பச்சரிசி, அகத்திக்கீரை வழங்க வேண்டும். சந்திரன் + ராகு/கேது சந்திர தசை நடப்பவர்களுக்கு ராகு/கேது தசை நடக்கும் தசை நடக்கும் ஜாதகத்தை இணைக்க கூடாது. இந்த கிரகச் சேர்க்கை ஆண், பெண்களை மனம் ஒன்றி வாழ விடுவதில்லை. தீராத மன உளைச்சல், மன நோயை மிகுதியாக்கி குடும்ப வாழ்க்கையை வெறுத்து தனிமைப்படுத்தி விடுகிறது. சட்ட ரீதியாக விவாகரத்து பெற்றவர்களுக்கு இந்த கிரக தசை, புத்தி சம்பந்தம் இருக்கும். இவர்களின் பிரிவினைக்கு சொல்லிக் கொள்ளும்படியான பெரிய காரணமே இருக்காது. இது போன்ற பிரச்சினை இருக்கும் தம்பதிகள் சர்ப்பம் உள்ள புற்றிற்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் மகிழ்ச்சி அதிகரிக்கும். செவ்வாய் + புதன் செவ்வாய், புதன் பகை கிரகங்கள் என்பதால் இந்த கிரகங்களின் தசை நடக்கும் ஜாதகங்களை சேர்க்க கூடாது.அத்துடன் திருமணத்திற்கு பிறகும் இந்த கிரகங்களின் தசை சந்திப்பு இருக்க கூடாது. தைரியமான தவறான நட்பை திருமணத்திற்கு பிறகு ஏற்படுத்தி விடும். 7-ம் பாவகம் வலிமையானவர்களை இது பாதிக்காது. இவர்கள் செவ்வாய் கிழமை முருகன் வழிபாடு செய்ய வேண்டும். செவ்வாய் + சனி திருமணத்திற்கு முன்னும், பின்னும் செவ்வாய், சனி தசை சந்திப்பு ஆண், பெண் இருவருக்கும் இருக்க கூடாது. பெண்களுக்கு மாங்கல்ய தோஷமும் ஆண்களுக்கு தொழில் நெருக்கடியும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி விபத்து கண்டம், சொத்து தகராறை ஏற்படுத்தும். இவர்கள் செவ்வாய் கிழமை சிவப்பு துவரை தர வேண்டும். சனிக்கிழமைகளில் பருப்பு சாதத்தை அன்னதானம் செய்ய வேண்டும். செவ்வாய் + ராகு/கேது செவ்வாய் தசை நடப்பவருக்கு ராகு/கேது தசை நடப்பவருடன் திருமணம் செய்யக் கூடாது. ஆண்களுக்கு உடன் பிறந்தவர்களுடனும், பெண்களுக்கு கணவருடனும் மன வேதனையை ஏற்படுத்தும் பல பெண்களுக்கு திருமணத்தை நடத்துவதில் சிரமத்தை தருகிறது. திருமணம் நடந்த பிறகு கல்யாணம் செய்யாமலே வாழ்வை கழித்து இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும்படியான பகை கிரக சேர்க்கை. எதை தின்னால் பித்தம் தெளியும் என்று கணவரை கவுரவப்படுத்தி சமுதாயத்தில் வலம் வர முயன்று மன நோயை வரவழைக்கும் பெண்களே அதிகம். பெண்களை கடுமையாக பாதித்து கணவரிடம் இருந்து பிரிக்கும் தசை புத்தியில் செவ்வாய் + ராகு /கேதுக்களே முதலிடம். கணவனை பாம்பு என்று தாண்டவும் முடியாமல் பழுது என்று நினைத்து மிதிக்கவும் முடியாமல் வாழ வைக்கிறது. இவர்கள் மாதவிடாய் நின்ற சுமங்கலிப் பெண்களிடம் ஆசி பெற வேண்டும். சுக்கிரன் + கேது சுக்கிரன்,கேது தசை நடக்கும் ஜாதகங்களை இணைக்க கூடாது. ஆண்களுக்கு சாதகமற்ற பகை கிரகச் சேர்க்கை . சுக்கிரன் + ராகு இரண்டும் போகத்தை தரும் நட்பு கிரகம் என்பதால் பெரிய பாதிப்பை தராது. பல ஆண்களுக்கு திருமணத்தையே நடத்தி தராத கிரகச் சேர்க்கை. திருமணத்திற்கு பெண் தேடியே திருமணத்தில் வெறுப்பை ஏற்படுத்தும். திருமணம் நடந்த பிறகு குடும்ப பிரச்சினைக்காக பஞ்சாயத்திற்கு நடந்தே வாழ்க்கை முடிந்து விடும். இந்த அமைப்பு பல கணவன், மனைவியை விரோதியாகவே வாழ வைக்கிறது. இவர்கள் வீட்டின் பூஜை அறையில் 2 டைமன் கல்கண்டு போட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் நிம்மதி அதிகரிக்கும். சனி +ராகு/கேது இந்த 3 கிரகங்களும் கர்ம வினை ஊக்கிகள் என்பதால் சனி, ராகு, கேது தசை நடக்கும் ஜாதகங்களை ஒன்றோடு ஒன்று இணைக்க கூடாது. இந்த கிரக தசை நடக்கும் ஜாதகங்கள் தாளமுடியாத வினைப் பதிவால் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இந்த தசை, புத்தி நடப்பில் இருக்கும் தம்பதிகள் சனிக்கிழமை அசைவ உணவைத் தவிர்த்து சிவ வழிபாட்டை கடைபிடித்தால் துக்கம் குறையும். முறையான திருமணப் பொருத்தம் மட்டுமே நிம்மதியான திருமண வாழ்க்கையைத் தருகிறது. மானிட வாழ்வில் நன்மை, தீமைகளை தீர்மானிப்பதில் தசை புத்தியின் வலிமையே அதிகம். இருவர் ஜாதகத்திலும் நன்மை தரும் தசை ஒருசேர வருவது போலும் தீமை தரும் தசை வரும் காலங்க ளில் ஒருவருக்கு வரும் தீமை மற்றவரின் தசையால் சரிசெய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.