தெரு நாய்களுக்கு உணவளிக்கும் நபர்கள்தான், அந்த நாய்கள் யாரையாவது கடித்தால் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்
தெரு நாய்களுக்கு உணவளிக்கும் நபர்கள்தான், அந்த நாய்கள் யாரையாவது கடித்தால் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும், அவர்களுக்கான மருத்துவச் செலவுகளையும், பராமரிப்புச் செலவுகளையும் ஏற்கவேண்டும் என்றுஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துவிட்டது. அதைக் கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் வி.கே.பிஜு என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து கேரளாவில் நாய்க்கடியால் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அண்மையில் கூட கேரள மாநிலம் ரன்னியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அவர் உயிரிழந்தார். எனவே, தெருநாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க கேரள அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது “நான் கூட நாய்களை அதிகம் விரும்புவேன். தெருவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் பட்டினியால் வாடாமல் இருக்க அதற்கு ஏராளமானோர் உணவு வழங்கி வருகின்றனர். அவற்றுக்கு உணவு வழங்குவோர்தான் நாய்களுக்கு தடுப்பூசி போடும் செலவையும் ஏற்க வேண்டும்.

அந்த நாய்கள், பொது 

மக்களில் யாரையாவது கடித்தாலும் அதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும். தெரு நாய்கள் குறித்த தொல்லைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்.தெரு நாய்களுக்கு உணவு வைப்பவர்கள்தான் பொதுமக்களை அந்த நாய்கள் கடிக்காமல் இருக்க தடுக்க வேண்டும். அதற்கான பொறுப்பையும் ஏற்க வேண்டும். கடிபட்டவர்கள் சிகிச்சை பெறும் செலவையும், பராமரிப்புச் செலவையும் ஏற்கவேண்டும். ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய்களைக் கண்டறிந்து கால்நடை பராமரிப்புத்துறையால் தனியாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் வரும் 28-ல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம்” என்றார்