நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர்

நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய  நில அளவையர்


சென்னை: நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புரசைவாக்கம் தாலுகா அலுவலக சர்வேயரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சென்னை புரசைவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வினோத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அணுகி, தனது நிலத்தை பதிவு செய்துள்ளார். அந்த நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து புரசைவாக்கம் தாலுகா அலுவலகத்திற்கு விண்ணப்ப மனு அனுப்பப்பட்டது. அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், ரூ.60 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று சர்வேயர் (பராமரிப்பு) சையது சவுக்கத்துல்லா பிர்கா விண்ணப்பதாரரிடம் கூறியுள்ளார். அதற்கு தன்னால் ஒரே நேரத்தில் ரூ.60 ஆயிரம் தரமுடியாது என்றும், ரூ.30 ஆயிரம் முதலில் தருவதாகவும், பிறகு வேலை முடிந்ததும் மீதமுள்ள பணத்தை தருகிறேன் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து வினோத் சென்னை நகர பிரிவு-2 லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் புகார்தாரர் வினோத்திடம் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்து லஞ்சம் கேட்ட சர்வேயரிடம் கொடுக்கும்படி கூறினர்.  அதன்படி வினோத் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆலோசனைப்படி புரசைவாக்கம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் சர்வேயர் சையது சவுக்கத்துல்லா பிர்காவிடம் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரம் லஞ்சப்பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சர்வேயர் சையது சவுக்கத்துல்லா பிர்காவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் மீது லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் புரசைவாக்கம் தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.