செப்டம்பர் மாதத்தில் சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரியால் மட்டும் ரூ.1000 கோடி வருமானம்!
சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரியால் மட்டும் ரூ.1000 கோடி வருமானம்! செப்.30 கடைசி நாள்.. மறவாதீர்!

சமீபத்தில் சென்னை மாநகராட்சி அறிவித்திருந்த சொத்துவரி உயர்வு அறிவிப்புக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில், வரி செலுத்துவதற்கான தேதி செப்.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதன்படி சொத்துவரியை அனைவரும் செலுத்திவிட்டால் வரி வருவாய் ரூ.1,000 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது.

சுமார் 85 லட்சம் மக்கள் வசிக்கும் சென்னையில் 13 லட்சம் பேர் சொத்துவரியை செலுத்த தகுதியானவர்களாவார்கள்.

வளர்ச்சி

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சொத்து வரி உயர்த்தப்படுவதாக மாநகராட்சி தரப்பில் சொல்லப்பட்டது. அதாவது, 5 கி.மீ பரப்பளவில் அமைந்த சென்னை மாநகராட்சி தற்போது 426 சதுர கி.மீ பரப்பளவாக நீடிக்கப்பட்டுள்ளது. 1688ல் தொடங்கப்பட்ட இந்த மாநகராட்சி 2022வரை வளர்ந்து இந்தியாவின் முதல் நான்கு நகரங்களில் ஒன்றாகவும், தென்னிந்தியாவின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் அளவுக்கு பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது.

30ம் தேதிக்குள்

85 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த பெருநகரத்தில், மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு மாநகராட்சிக்கு நிதி ஆதாரம் அவசியமானதாகும். எனவேதான் சொத்து வரி உயர்த்தப்படுகிறது என மாநகராட்சி தரப்பில் சொல்லப்பட்டது. தற்போது 13 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துபவர்களாக இருக்கின்றனர். இவர்கள் நடப்பாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை செப்டம்பர் 30ம் தேதிக்குள் செலுத்தி முடித்துவிட வேண்டும்.

முன்பணம்


இந்நிலையில் இந்த 13 லட்சம் பேரில் சுமார் 54% பேர் வரியை செலுத்தியுள்ளனர். NRI என அழைக்கப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் சொந்தமான சொத்துக்களுக்கு வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரி முன்பணத்தை செலுத்திவிட்டால் சென்னை மாநகராட்சியின் வரி வருவாய் ரூ.1,000 கோடியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாநகராட்சி தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ.600 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

1,000 கோடி

இது வருடம் 30ம் தேதிக்குள் ரூ.1,100 கோடியை எட்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேபோல மாநகராட்சிக்கு வரி செலுத்தும் 13 லட்சம் பேரில் 23,000 பேர் அரையாண்டுக்கு ரூ.50,000 வரி செலுத்துபவர்களாவார்கள். இவர்களில் 65% பேர் தங்கள் வரியை செலுத்தியுள்ளனர். உலக வங்கியின் வழிகாட்டுதல்களையடுத்து சொத்துவரி விகிதங்கள் உயர்த்தப்பட்ட பிறகு, ரூ.50,000 வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் இந்த எண்ணிக்கை 13,000ஆக இருந்தது.

கடந்த 2021ல் அரையாண்டில் சொத்துவரி வசூல் ரூ.450 கோடியாக இருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு ரூ.600 கோடியாக வரி வசூல் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.