செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சியில் மின் இணைப்பு வழங்க 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக உதவியாளரை, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்நிலையில், கருங்குழி பேரூராட்சி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில், தனது வீட்டுக்கு புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு இணைப்பு வழங்கவில்லை. இதையடுத்து அங்கு பணிபுரியும் வணிக உதவியாளர் சரவணன் என்பவரை அணுகினார். அப்போது, விண்ணப்பத்தை பரிசீலனை செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப 5 ஆயிரம் லஞ்சமாக தரும்படி கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத பார்த்திபன், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் ஆலோசனைப்படி, ரசாயனம தடவிய 5 ஆயிரத்தை எடுத்து கொண்டு பார்த்திபன் நேற்று மாலை மின்வாரிய அலுவலகத்தில், சரவணனை சந்திக்க சென்றார். அங்கு சரவணன், 5 ஆயிரத்தை வாங்கும்போது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை சுற்றி வளைத்து கையும், களவுமாக மடக்கி கைது செய்தனர். மேலும் அவரிடம் கணக்கில் வராத தொகை ₹7 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.