இவர் வருகையைப் பலர் பல விதமாகப் பார்க்கிறார்கள்.
சோ. ராமசாமி அரசியல் விமர்சகர் என்ற நிலையிலிருந்து பல விஷயங்களைத் துல்லியமாகக் கணித்தார். அவர் சொன்ன போது புரியவில்லை. கடைசியில் அதுதான் நடந்தது. பலமுறை அவருக்கு ESP (Extra Sensory Perception) புலன் கடந்த சக்தி இருக்குமோ என்கிற சந்தேகம் வந்து. அவ்வளவு துல்லியமான கணிப்பு.
1977 தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஜனதா என்று ஆரம்பித்த புதுக்கட்சியை வைத்துக் கொண்டு இந்திரா காந்தியை படுதோல்வி அடைய வைத்தனர். எமர்ஜென்சி கொடுமைக்காக இந்திரா காந்திக்கு கடும் பாடம் கற்றுத் தரப்பட்டது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அடல் பிஹாரி வாஜ்பாய் வெளியுறவுத்துறை அமைச்சராகி அபாரமான வேலைகள் செய்தார். டெல்லியில் இஸ்ரேலின் எம்பஸி ஆரம்பிக்கப் பட்டது. பல நாடுகளுடன் நல்லுறவு ஏற்பட்டது.
சோ. துக்ளக் இதழில் 'ஒருநாள் கண்டிப்பாக வாஜ்பாய் நாட்டின் பிரதமராவார்' என்று எழுதினார். இதைப் பற்றி குமுதம் வார இதழில் ஒரு வாசகர் அரசு கேள்வி பதிலில் கேள்வி எழுப்பினார். ' வாஜ்பாய் ஒருநாள் கண்டிப்பாகப் பிரதமராவார் என்கிறார் சோ? ' அரசு பதில் 'கனவு காணும் உரிமை சோ. வுக்கும் உண்டு' ஆனால் 1998ல் வாஜ்பாய் பிரதமரானாரா இல்லையா.
ஜெயலலிதா சோ. வின் நண்பர். 1983 ல் ஒரு நாள் தொலை பேசியில் 'நான் எம். ஜி. யார் தலைமை யிலுள்ள அ. தி. மு. க. வில் சேர்ந்து அரசியலில் இறங்கலாமென்றிருக்கிறேன். உங்கள் கருத்து என்ன? ' என்றதும் சோ. பதிலுக்கு 'உன் பக்கத்திலிருக்கும் எம். ஜி. யாரிடம் ஃபோனைக் கொடு' என்றார். அதிர்ந்து போன ஜெயலலிதா கட் செய்து விட்டார். அடுத்து எம். ஜி. யாரிடமிருந்து சோ. வுக்கு ஃபோன் வந்தது. அவர் சோ. விடம் 'நான்தான் ஜெயலலிதாவை பேசச் சொன்னேன். சரியாகக் கண்டுபிடித்து விட்டாய். உன் கருத்தைச் சொல்' என்றார். சோ. 'ஜெயலலிதா சுறுசுறுப்பானவர். கட்சிக்கு உதவுவார். தி.மு.க. அவர் பெண் என்றும் பார்க்காமல் கண்டபடி பேசி மேலும் அனுதாப ஓட்டை உங்களுக்கு வாங்கித் தருவார்கள். அதே சமயம் ஜெயலிதாவைச் சமாளிக்க தனி சாமர்த்தியம் வேண்டும். அதைப் பின்னால் பார்க்கலாம்' என்றார். அதன் பின்னர் நடந்தவை நமக்குத் தெரியும்.
எதிர்மறையான விஷயங்களில் கூட அவர் சொன்னது அப்படியே பலித்தது. எல். டி. டி. ஈ. விவகாரம். புலிகளை நம்பாதீர்கள் என்று தலைதலையாய் அடித்துக் கொண்டார். அவர்கள் இலங்கையில் ஜனநாயகத்தில் ஈடுபட்ட தமிழ்த் தலைவர்களையும் கொன்றார்கள். மற்ற போராளித் தமிழ்க் குழுக்களையும் கொன்றார்கள். இந்திய அமைதிப் படை இலங்கைக்குப் போன போது சிங்களர்களிடம் திடீர்ப் பாசம் வந்து நாங்கள் சகோதர யுத்தம் தான் செய்கிறோம் நீங்கள் வரக்கூடாது என்று சொல்லி சிங்கள ராணுவத்திடமிருந்தே ஆயுதங்களை வாங்கி தாங்கள் பெண்கள் குழந்தைகள் பின்னால் ஒளிந்து கொண்டு இந்திய அமைதிப் படை வீரர்கள் பலரை சுட்டுக் கொன்றார்கள். இந்திய மண்ணிலேயே ஊடுருவி ராஜிவ் காந்தியை அவர்கள் படுகொலை செய்த பின் தான் ஆஹா அன்றைக்கே சொன்னாரே சோ. ராமசாமி என்ற விழிப்பு வந்தது.
மோடியைக் பற்றி சோ. கணித்ததும் இம்மி பிசகாமல் நடந்தது.
ரஜினியைப் பற்றியும் கணித்தார். அது எப்படி என்பதை உறுதி செய்யும் நேரம் வந்து விட்டதாகவே தெரிகின்றது.
சோ. ராமசாமி அரசியல் விமர்சகர்
• Bharathaidhazh