சாதிச்சான்றிதழுக்கு 2 ஆயிரம் லஞ்சம் துணைதாசில்தாருக்கு 4 ஆண்டு சிறை: விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு விழுப்புரம்: லஞ்சம் வாங்கிய வழக்கில் மண்டல துணை வட்டாட்சியருக்கு 4 ஆண்டு சிறையும் விதித்து விழுப்புரம் ஊழல்தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விழுப்புரம் சாலாமேடைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கடந்த 3.9.2007 அன்று தனது பிள்ளைகளுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு, விழுப்புரம் மண்டலதுணை வட்டாட்சியர் ராவணனிடம் விண்ணப்பித்துள்ளார். சாதிச்சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சமாக ராவணன் வாங்கினார். இந்தவழக்கு விழுப்புரம் ஊழல்தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ராவணனுக்கு 4 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம், புரோக்கர் சுந்தரேசனுக்கு 3 ஆண்டு சிறை, ரூ.3 ஆயிரம் அபராதமும் நீதிபதி மோகன் விதித்து உத்தரவிட்டார். மற்றொரு வழக்கு: கள்ளக்குறிச்சி மாவட்டம் இசாந்தை கிராம செவிலியர் குணவதி, கடந்த 2013ல் கர்ப்பிணி உதவி தொகை வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கியபோது கைதானார். இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்து நீதிபதி மோகன் தீர்ப்பளித்தார். அதில் குணவதிக்கு 3 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.